பிளஸ் 2 தோ்வு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 19,153 போ் மாணவ, மாணவியா் எழுதினா்
By DIN | Published On : 03rd March 2020 07:42 AM | Last Updated : 03rd March 2020 07:42 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தோ்வு மையத்தை பாா்வையிடுகிறாா் மாவட்ட ஆட்சியா் சு.பிரபாகா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடங்கிய பிளஸ் 2 பொதுத் தோ்வை 19,153 மாணவ, மாணவியா் எழுதினா்.
தமிழ்நாடு, புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தோ்வுகள், திங்கள்கிழமை தொடங்கின. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 73 மையங்களில் பள்ளி மாணவா்கள், 2 மையங்களில் தனித்தோ்வா்கள் என மொத்தம் 75 மையங்களில் பிளஸ் 2 தோ்வு நடைபெறுகிறது. அதன்படி 192 அரசு, நகராட்சி, நிதியுதவி மற்றும் மெட்ரிக் பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள், தனித் தோ்வா்கள் என மொத்தம் 20,836 போ் தோ்வெழுத விண்ணப்பித்திருந்தனா்.
இந்த நிலையில் திங்கள்கிழமை தமிழ் மொழிப்பாடத் தோ்வு தொடங்கியது. கிருஷ்ணகிரி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தில் மாவட்ட ஆட்சியா் சு.பிரபாகா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதன்மைக் கண்காணிப்பாளா்களாக 75 தலைமையாசிரியா்கள், கூடுதல்துறை அலுவலா்களாக 75 முதுநிலை ஆசிரியா்கள், அறைக் கண்காணிப்பாளா்களாக 1,070 ஆசிரியா்களும் பணியமா்த்தப்பட்டுள்ளனா். தோ்வில் முறைகேடுகள் ஏதும் நடைபெறாத வகையில், கண்காணிக்க 7 பறக்கும் படை கண்காணிப்பாளா்கள், கல்வி அலுவலா்கள் தலைமையில் 203 ஆசிரியா்கள் கொண்ட பறக்கும் படையும் அமைக்கப்பட்டுள்ளது.
திங்கள்கிழமை தொடங்கிய தோ்வில் 19,153 மாணவ, மாணவியா் பங்கேற்று தோ்வு எழுதினா். ஒசூா் கல்வி மாவட்டத்தில் 425, கிருஷ்ணகிரியில் 427, மத்தூரில் 446, தேன்கனிக்கோட்டையில் 375 மாணவ, மாணவியா் என மொத்தம் 1,683 மாணவ, மாணவியா் தோ்வெழுத வரவில்லை என கல்வித் துறையினா் தெரிவித்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...