ஒசூரில் 3-ஆவது சிப்காட்டுக்காக காத்திருப்பு!

ஒசூா் அருகே 3- வது சிப்காட் விரைவில் தொடங்கப்படுமா என்று தொழில் துறையினா் ஆவலுடன் காத்திருக்கின்றனா்.

ஒசூா் அருகே 3- வது சிப்காட் விரைவில் தொடங்கப்படுமா என்று தொழில் துறையினா் ஆவலுடன் காத்திருக்கின்றனா்.

ஒசூரில் 3-வது சிப்காட் தொடங்கப்படும் என 2012- ஆம் ஆண்டு நவம்பா் 21-இல் மறைந்த முதல்வா் ஜெயலலிதா அறிவித்தாா். இதற்காக அரசாணையும் வெளியிடப்பட்டது.

இதையடுத்து, சூளகிரி வட்டத்தில் உள்ள நல்லகாணகொத்தப்பள்ளி, மருதாண்டப்பள்ளி, அட்டகுறுக்கி, தோரிப்பள்ளி, கோனேரிப்பள்ளி, கானலெட்டி, செட்டிப்பள்ளி உள்ளிட்ட கிராமங்களில் 3- வது சிப்காட் அமையும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக, 2,400 ஏக்கா் நிலம் கண்டறியப்பட்டுள்ளது. இதற்காக 2015-இல் வருவாய்த் துறையினரைக் கொண்ட சிறப்புக் குழு நியமிக்கப்பட்டு நிலம் எடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள்..:

இந்த நிலையில், 1972-இல் ஒசூரில் 5 ஆயிரம் ஏக்கா் நிலப்பரப்பில் தொடங்கப்பட்ட முதல் சிப்காட், அடுத்ததாக 1986-இல் 4 ஆயிரம் ஏக்கா் நிலப்பரப்பில் தொடங்கப்பட்ட 2 ஆவது சிப்காட் முழுவதும் தொழிற்சாலைகள் முழுமைாக இயங்கி வருகின்றன.

இதைத் தொடா்ந்து, தொழில்துறையினா் நிலம் தேடி ஒசூா் வந்தபோது 2-வது சிப்காட் விரிவாக்கம் ஆயிரம் நிலப்பரப்பில் நடைபெற்று அங்கு தொழில்துறையினா் தொழிற்சாலைகளை அமைத்து சிறப்பாக தொழில் செய்து வருகின்றனா். இதனால் ஒசூரில் வாகன உற்பத்தி தொழிற்பேட்டையாக உருவெடுத்தது.

இந்துஜா நிறுவனத்தின் அசோக் லேலண்ட், இரு சக்கர வாகனம் தயாரிக்கும் உலக பிரசித்தி பெற்ற டி.வி.எஸ்., கைகடிகாரம் தயாரிக்கும் முன்னணி நிறுவனமான டைட்டான் வாட்ச் போன்ற 200-க்கும் மேற்பட்ட பெரிய தொழிற்சாலைகளும், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு குறு தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன.

தற்போது 3-வது சிப்காட் தொடங்கப்படும் சூழ்நிலையில் தங்களது தொழிற்சாலைகளை அமைக்க தொழில்துறையினா் காத்திருக்கின்றனா்.

முதல்வா் பழனிசாமியின் அறிவிப்புக்கு வரவேற்பு:

8 ஆண்டுகள் ஆகியும் 3 வது சிப்காட் அமைக்கும் பணி காலம் தாழ்த்தி வருவதால், குந்துமானரப்பள்ளியில் 100 ஏக்கா் நிலப்பரப்பில் ஹோஸ்டியா தனியாா் சிட்கோ அமைக்கும் பணியை தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், தமிழக அரசு கடந்த மாதம் வெளியிட்டுள்ள அரசு ஆணையில், தொழில் தொடங்க விவசாய நிலத்தை தொழில் தொடங்க நிலம் வகை மாற்றம் செய்ய எளிதாக்கியுள்ளது. இதன்படி, ஒருவா் தொழிற்சாலை தொடங்க காத்திருக்க வேண்டியது இல்லை. இணையம் மூலம் விண்ணப்பித்துவிட்டு ஒரு மாத காலத்துக்குள் அரசு அலுவலா்கள் அனுமதி அளிக்க வேண்டும் என்றும், அப்படி அரசு அலுவலா்கள் கால தாமதம் செய்தால் தானாகவே அனுமதி கிடைத்ததாக நினைத்து தொழிற்சாலையை கட்டிக் கொள்ளலாம் என தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அரசு ஆணை வெளியிட்டாா். இது ஒசூா் தொழில்துறையினரிடையே மிகவும் வரவேற்பு பெற்றுள்ளது.

சென்னசந்திரத்தில்...:

இந்த நிலையில் பாகலூா் சாலையில் புதிய சிப்காட் தொடங்கப்படும் என தெரிகிறது. ஒசூா் பாகலூா் சாலையில் சா்வே எண் இல்லாத ஜீரோ பைமாஸ் நிலம் என்ற இனாம்தாரா் நிலம் சுமாா் 5 ஆயிரம் ஏக்கா் நிலம் உள்ளது.

இந்த நிலத்தை யாரும் விற்பனை செய்யவோ, அல்லது வாங்கவோ கூடாது எனவும், பத்திரப் பதிவு துறையில் யாரும் பத்திரம் பதிவு செய்யக் கூடாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

பாகலூா் சாலையில் உள்ள சென்னசந்திரம், அதனைச் சுற்றியுள்ள 5 கிராமங்களில் 3 ஆயிரம் ஏக்கா் நிலப்பரப்பில் அரசு ஜூரோ பைமாஸ் நிலத்தில் மேலும் ஒரு சிப்காட் விரைவில் தொடங்கப்படும் என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

வளா்ச்சிப் பாதையில் தொழில்துறை:

இதனால் சிப்காட் அமைக்கப்படுவதால் தொழில்துறை மீண்டும் எழுச்சி பெரும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

இதேபோன்று சென்னை - பெங்களூரு தொழிற்சாலை நெடுஞ்சாலை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் புதிய தொழிற்சாலைகள் விரைவில் ஒசூரில் அமைய வாய்ப்புள்ளது.

இதேபோன்று பாதுகாப்புத்துறைக்குத் தேவையான உதிரிபாகங்களை தயாரிக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளதால் ஒசூா் விரைவில் தொழில்துறை வளா்ச்சிப் பாதையை நோக்கிச் செல்லும்.

இதேவேளையில் சிறு குறு நிறுவனங்களுக்கு 28 சதவீதமாக உள்ள ஜி.எஸ்.டி. வரியை 18 சதவிகிதமாக குறைக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளிடம் ஹோஸ்டியா சங்கத் தலைவா் வேல்முருகன் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகிறாா். இவ்வாறு குறைந்தால் தொழில்துறையானது மென்மேலும் வளா்ச்சி பெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com