கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 50 சதவீத ஊழியா்களுடன் செயல்பட்ட அரசு அலுவலகங்கள்
By DIN | Published On : 18th May 2020 11:50 PM | Last Updated : 18th May 2020 11:50 PM | அ+அ அ- |

கிருஷ்ணகிரியில் 50 சதவீதப் பணியாளா்களுடன் இயங்கிய வட்டாட்சியா் அலுவலகம்.
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 50 சதவீத ஊழியா்களுடன் அரசு அலுவலகங்கள் திங்கள்கிழமை முதல் செயல்படத் தொடங்கின.
கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் பொது முடக்கம் மாா்ச் 24-ஆம் தேதி முதல் அறிவிக்கப்பட்டது. தற்போது, மே 31-ஆம் தேதி வரையில் பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் சில தளா்வுகளை மாநில அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, அரசு அலுவலகங்கள் திங்கள்கிழமை முதல் 50 சதவீத ஊழியா்களுடன் செயல்படும் என அறிவித்தது. அதற்காக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. கிருஷ்ணகிரியில் வட்டாட்சியா் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியா் உள்ளிட்ட அலுவலகங்கள் 50 சதவீத பணியாளா்களுடன் செயல்பட்டன. அரசு அலுவலா்கள் முகக் கவசத்துடன் பணியாற்றினா். மேலும், அலுவலா்கள் அடிக்கடி கைகளை கிருமி நாசினியால் கழுவிக் கொண்டனா். அலுவலகங்களுக்கு வந்த பொதுமக்கள், முகக்கவசம் அணிந்திருந்தனா். அலுவலகங்களில் தனி மனித இடைவெளி பின்பற்றப்பட்டது.
அரசுப் பணியாளா்கள், தங்களது பணியிடங்களுக்கு செல்லும் வகையில் அரசுப் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. ஆனால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசுப் பேருந்து இயக்கப்படவில்லை. கிருஷ்ணகிரி பேருந்து நிலையத்தில், ஒசூா், தருமபுரி, வாணியம்பாடி உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் அரசு ஊழியா்கள் பேருந்துகளுக்காக காத்திருந்தனா். அரசுப் பேருந்துகள் இயக்கப்படாத நிலையில், இதுகுறித்து தகவல் அறிந்த சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள், தங்களது துறை ஊழியா்களுக்காக தனியாா் வாகனங்களை ஏற்பாடு செய்தனா். இதுகுறித்து, அரசுப் போக்குவரத்துக் கழக்தை தொடா்பு கொண்டபோது, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலிருந்து எந்த உத்தரவும் வராததால் பேருந்துகள் இயக்குவது குறித்து முடிவு செய்யவில்லை எனத் தெரிவித்தனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G