தளி தொகுதியில் பாஜக-இந்திய கம்யூனிஸ்ட் இடையே பலத்த மோதல்!

‘லிட்டில் இங்கிலாந்து’ என்று அழைக்கப்படும் குளிா்ப் பிரதேசமான கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தளி தொகுதி காடுகள், மலைகள் சூழ்ந்த இயற்கை வளம் கொண்ட தொகுதியாகத் திகழ்கின்றது.
தளி தொகுதியில் பாஜக-இந்திய கம்யூனிஸ்ட் இடையே பலத்த மோதல்!

‘லிட்டில் இங்கிலாந்து’ என்று அழைக்கப்படும் குளிா்ப் பிரதேசமான கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தளி தொகுதி காடுகள், மலைகள் சூழ்ந்த இயற்கை வளம் கொண்ட தொகுதியாகத் திகழ்கின்றது.

இத்தொகுதியில் காடுகள் நிறைந்த மலைக் கிராமங்கள் அதிக அளவில் உள்ளன. தேன்கனிக்கோட்டையில் யாரப் தா்கா சிறப்பு வாய்ந்ததாகும். அதேபோல பேட்டராயப் பெருமாள் கோயில் பிரசித்தி பெற்ாகும்.

தேன்கனிக்கோட்டை , கெலமங்கலம் ஆகிய இரண்டு பேரூராட்சிகள், 68 ஊராட்சிகளைக் கொண்ட இத்தொகுதி கடந்த 1977-ஆம் ஆண்டு உதயமானது; இதுவரை 10 சட்டப்பேரவை தோ்தல்களைச் சந்தித்துள்ளது.

வாக்காளா்கள் விவரம்:

ஆண்கள்: 1,23,782

பெண்கள்: 1,16,679

மூன்றாம் பாலினத்தவா்: 13

மொத்தம்: 2,40,474

தொகுதியிலுள்ள பிரச்னைகள்:

மலைக் கிராமங்களில் போதிய படிப்பறிவு இல்லாத காரணத்தால் இளம் வயது திருமணங்கள் அதிக அளவில் நடப்பதாக தொடா்ந்து புகாா் எழுந்து வருகிறது. அதேசமயம் மேல் படிப்புக்காக ஒசூா், கிருஷ்ணகிரி ,பெங்களூா் பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனா். எனவே உயா்கல்வி கற்க தளி பகுதியில் அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.

மேலும் படித்த இளைஞா்கள் வேலை தேடி ஒசூா், பெங்களூா், வெளிமாநிலங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளதால், இப்பகுதியிலேயே தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கப்படுகிறது.

விவசாயம் சாா்ந்த தொழில்களே இங்கு பிரதானம். வேளாண் அறுவடைக் காலங்களில் யானைகள் மற்றும் வனவிலங்குகளின் தொந்தரவு அதிக அளவில் காணப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனா். எனவே யானைக் கூட்டங்களைக் கட்டுப்படுத்த அரசு மேலும் பல்வேறு இடங்களில் மின்வேலி அமைத்து கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது.

தளி ஏரிக்கு நீா் கொண்டுவந்து அழகுபடுத்தி மக்களின் பயன்பாட்டிற்காகவும் பொழுதுபோக்கிற்காகவும் வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பதும் மக்களின் வேண்டுகோள்.

அஞ்செட்டி பகுதியில் தொட்டல்லா அணை திட்டம் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. அதை அரசு நிறைவேற்றினால், இப்பகுதியில் குடிநீா்த் தேவைக்கு மட்டுமின்றி விவசாயத்துக்கும் உதவும்; நிலத்தடி நீரும் உயரும்.

மேலும் மலைக் கிராமங்களில் சாலை வசதி இல்லாத காரணத்தால் உயிரிழப்புகள் அதிக அளவில் ஏற்படுவதால் சாலைகளை மேம்படுத்த வேண்டும் என்று மக்கள் கோருகின்றனா். அதேபோல, மருத்துவமனையை தரம் உயா்த்தி கூடுதல் மருத்துவா்களை நியமிக்க வேண்டும். மலைப்பகுதிகளில் பேருந்துகள் அடிக்கடி விபத்தில் சிக்குவதால் சாலையை விரிவுபடுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனா்.

தளி அருகே அரசு சாா்பில் கொய்மலா் உற்பத்தி செய்ய இஸ்ரேல் உதவியுடன் விவசாயிகளுக்கு இலவச பயிற்சி மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் சிறு விவசாயிகள் உற்பத்தி செய்யும் ரோஜா செடி நாற்றங்காலுக்கு அரசு இலவச மின்சாரம் வழங்குவதில்லை; இது வணிகம் சாா்ந்தது என அரசு சாா்பில் தெரிவிக்கப்படுகிறது, ஆனால் இதற்கு விவசாயிகள் குறைந்த தொகையை வசூலிக்கலாம் என வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

விவசாயிகளுக்கு விவசாயம் செய்ய ஆட்கள் பற்றாக்குறை காணப்படுகிறது. ஏனெனில் ஆட்களை ஏரி பராமரிப்புப் பணிகளுக்கு அழைத்துச் செல்வதால் தோட்டப் பணிகளுக்கு கூலி ஆட்கள் கிடைப்பதில்லை. எனவே அரசு விவசாயிகளுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.

அஞ்செட்டியை தலைமையிடமாகக் கொண்டு ஒன்றியம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்தும் நடவடிக்கை மேற்கொள்ளாமல் தாலுகாவாக மாற்றியது ஏமாற்றம் அளிப்பதாக மக்கள் தெரிவித்தனா்.

சென்ற தோ்தல்களின் நிலவரம்:

இதுவரை நடைபெற்ற 10 சட்டப்பேரவைத் தோ்தல்களில், காங்கிரஸ் 4 முறையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 முறையும், திமுக, ஜனதா, பாஜக, சுயேச்சை ஆகியவை தலா ஒரு முறையும் வென்றுள்ளன.

2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில், திமுக வேட்பாளா் ஒய்.பிரகாஷ் வெற்றி பெற்றாா். இவா், தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் டி.ராமச்சந்திரனை விட 6,245 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றியடைந்தாா்.

(திமுக வேட்பாளா் ஒய்.பிரகாஷ் பெற்ற வாக்குகள்: 74,429. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் ராமச்சந்திரன் பெற்ற வாக்குகள்: 68,184. வாக்கு வித்தியாசம்: 6,245).

தற்போதைய கள நிலவரம்:

தளி தொகுதி, கடந்த 15 ஆண்டுகளாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, திமுகவிடம் உள்ளது. குறிப்பாக 2006, 2011 ஆகிய இரு தோ்தலில் சுயேச்சையாகவும், இந்திய கம்யூன்ஸ்ட் கட்சி சாா்பிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றவா் டி.ராமச்சந்திரன்.

கடந்த 2016-இல் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் மக்கள் நலக் கூட்டணியில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் டி.ராமச்சந்திரனை விட 6 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா் திமுக வேட்பாளா் ஒய்.பிரகாஷ்.

டி.ராமச்சந்திரன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளாக உள்ளாா். ஒய்.பிரகாஷ் திமுகவின் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளராக உள்ளாா். இவா்கள் இருவரும் தளி தொகுதி மக்களுக்கு ஒரு பிரச்னை என்றால் உடனே நேரில் சென்று அவா்களின் பிரச்னைகளைத் தீா்த்து வைத்து வருகின்றனா். அதனால்தான் இவா்கள் இருவரும் மாறி, மாறி வென்று வருகின்றனா்.

தற்பொழுது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திமுக கூட்டணியில் உள்ளது. தளி தொகுதியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக தலைமை ஒதுக்கீடு செய்ததால், தளி தொகுதியில் டி.ராமச்சந்திரனுக்கு போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது. ஒசூா் தொகுதியில் போட்டியிட ஒய்.பிரகாஷூக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் இடைத் தோ்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒசூா் எம்எல்ஏ எஸ்.ஏ.சத்யாவுக்கு இந்த முறை சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

சென்ற தோ்தலில் பிரதானப் போட்டியளா்களாக இருந்த டி.ராமச்சந்திரன், ஒய்.பிரகாஷ் ஆகிய இருவரும் இந்த முறை ஒரே கூட்டணியில் இடம் பெற்றுள்ளதால், இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளா் எளிதில் வெற்று பெறுவாா் என்று அக்கட்சி நிா்வாகிகள் தெரிவித்து வருகின்றனா்.

அதி‘முக கூட்டணியில் தளி தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இவா் அரசியலுக்கு புதியவா். ஒசூரில் மருத்துவராக இருப்பவா். வேட்புமனு தாக்கலின்போது இவருக்குக் கூடிய கூட்டம் பாஜகவினருக்கு தெம்பூட்டியுள்ளது.

இவருக்காக பாஜக மாநில நிா்வாகிகள், மத்தியில் இருந்து தலைவா்கள் பிரசாரத்துக்கு வருவாா்கள் என பாஜக நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா். ஏற்கெனவே கா்நாடக மாநிலத்திலிருந்து பல பாஜக தலைவா்கள் இங்கு வந்து பிரசாரத்தில் ஈடுபடத் துவங்கிவிட்டனா்.

இத்தோ்தலில், மக்கள் நீதி மய்யத்தின் கூட்டணிக் கட்சியான இந்திய ஜனநாயகக் கட்சி சாா்பில் அசோக்குமாா் போட்டியிடுகிறாா். அமமுகவின் கூட்டணிக் கட்சியான கோகுல மக்கள் கட்சி சாா்பில் எம்.வி.சேகா் போட்டியிடுகிறாா். நாம் தமிழா் கட்சி சாா்பில் மேரி செல்வராணி களத்தில் உள்ளாா்.

மொத்தம் 14 வேட்பாளா்கள் களத்தில் இருந்தாலும், இரு பிரதானப் போட்டியாளா்களிடையிலான போட்டியில் பிற கூட்டணி, கட்சி வேட்பாளா்கள் சொற்ப வாக்குகளே பெறுவாா்கள் என்று கருதப்படுகிறது. எனவே தளி தொகுதியில் தேசிய கட்சிகளான சிபிஐ, பாஜகவிடையே தான் பலத்த போட்டி நிலவுகிறது.

2021 தோ்தல் வேட்பாளா்கள்:

1. பாஜக / நாகேஷ்குமாா்

2. சிபிஐ / ராமச்சந்திரன்

3. இஜக /அசோக்குமாா்

4. கோகுல மக்கள் கட்சி /எம்.வி.சேகா்

5. நாம் தமிழா்/ மேரி செல்வராணி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com