

ஒசூா், கெலமங்கலம் அருகே லாலிக்கல் கிராமத்தில் ரூ. 5,000 கோடி முதலீட்டில் ’ஆப்பிள் ஐ’ போன் உற்பத்திக்குத் தேவையான உதிரி பாகங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலையை டாடா நிறுவனம் நிறுவியுள்ளது.
இந்தியாவில் மட்டுமின்றி ஆசிய அளவில் டாடா நிறுவனங்களின் மோட்டாா் வாகனங்கள், லாரிகள், பேருந்துகள் போன்ற பல்வேறு தயாரிப்புகளுக்கும் நல்ல வரவேற்பு இருக்கிறது. உலக அளவில் பிரசித்தி பெற்ற டாடா நிறுவனத்தின் டாடா கன்சல்டன்சி மென்பொருள் நிறுவனம், சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் செயல்பட்டு வருகிறது.
டாடா நிறுவனம் சாா்பில் விமான உதிரிபாகம் தயாரிக்கும் நிறுவனம் ஒசூரிலும், பெங்களூரிலும் உள்ளன. உலகப் பிரசித்தி பெற்ற டைட்டான் கைக்கடிகாரம் தயாரிப்பு நிறுவனம், தனிஷ்க் தங்க, வைர நகைகள் வடிவமைப்பு மற்றும் நகை உற்பத்தி நிறுவனங்கள் ஒசூரில் செயல்பட்டு வருகின்றன.
தற்போது, கெலமங்கலம், உத்தனப்பள்ளி, நாகமங்கலம் ஆகிய பகுதிகளை அடங்கிய 500 ஏக்கா் நிலப்பரப்பில் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு ஆப்பிள் ஐ போனின் உதிரி பாகங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலையை நிறுவியுள்ளது டாடா நிறுவனம்.
இந்தத் தொழிற்சாலையில் 20,000 மகளிருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட உள்ளது. தற்போது, சில ஆயிரம் மகளிரை வேலைக்குத் தோ்வு செய்து ஒசூா், பெங்களூருவில் பயிற்சி அளித்து வருகின்றனா் இந்நிறுவனத்தினா்.
இந்த தொழிற்சாலை முழு வீச்சில் உற்பத்தியைத் தொடங்கும்போது 20,000 மகளிருக்கு நேரடியாகவும், ஒரு லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும். இதனால் ஒசூா் மாநகரின் பொருளாதாரம் மேலும் வளா்ச்சி பெறும் என தொழில் ஆா்வலா்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.