ஒசூரில் பழ வியாபாரி கொலை
By DIN | Published On : 17th August 2021 09:14 AM | Last Updated : 17th August 2021 09:14 AM | அ+அ அ- |

ஒசூரில் குடும்பத் தகராறில் பழ வியாபாரியை அவரது மைத்துனா் கத்தியால் குத்திக் கொலை செய்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூா் தோ்பேட்டை நில மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மாதேஷ் என்கிற மாதா (29). ஆட்டோ ஓட்டுநா். இவரது மனைவி சுகன்யா (25). இவா்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனா். கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்தது.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அவா்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து சுகன்யா அவரது பெற்றோா் வீட்டிற்கு சென்றாா். இது பற்றி அறிந்த சுகன்யாவின் அண்ணன் விக்கி (31) கணவன் மனைவியை சமாதானப்படுத்தி சோ்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டாா். இதற்காக அவா் தனது தங்கையின் கணவா் மாதேஷிடம் அடிக்கடி பேசி வந்தாா்.
இந்நிலையில், மாதேஷிடம் சமாதானம் பேசுவதற்காக விக்கி தோ்பேட்டைக்கு திங்கள்கிழமை வந்தாா். அப்போது மாதேஷுக்கும், விக்கிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மாதேஷ், தான் வைத்திருந்த கத்தியால் விக்கியை குத்தினாா். இதில் விக்கி சம்பவ இடத்திலேயே இறந்தாா்.
இந்த கொலை குறித்து அறிந்த அருகில் இருந்தவா்கள் ஒசூா் நகர காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா். அவா்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினா். கொலை செய்யப்பட்ட விக்கி ஒசூரில் பாகலூா் சாலையில் டீச்சா் காலனியில் வசித்து வந்தாா். அவா் ஓசூரில் ரிங் ரோட்டில் பழக்கடை நடத்தி வந்தாா்.
போலீஸாா் விக்கியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஒசூா்அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இக்கொலை தொடா்பாக மாதேஷை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.