தேமுதிக பொருளாளா் பிரேமலதா உள்பட 350 போ் மீது வழக்குப் பதிவு
By DIN | Published On : 21st August 2021 11:23 PM | Last Updated : 21st August 2021 11:23 PM | அ+அ அ- |

கரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக தேமுதிக பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த் உள்பட 350 போ் மீது ஒசூா் நகர போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
ஒசூரில் ராம்நகா், அண்ணா சிலை அருகில் வெள்ளிக்கிழமை தேமுதிக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடந்தது. கா்நாடக அரசு மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்த கோரி இந்த ஆா்ப்பாட்டம் நடந்தது. இதில் கட்சியின் பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த், அவரது மகன் விஜய பிரபாகரன் மற்றும் மாவட்டச் செயலாளா்கள், நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
இது குறித்து ஒசூா் கிராம நிா்வாக அலுவலா் விஜயகுமாா் ஒசூா் நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதில் கரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியும், சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமலும் தேமுதிகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக புகாரில் கூறியிருந்தாா். அதன் பேரில் பிரேமலதா விஜயகாந்த், அவரது மகன் விஜய பிரபாகரன் உள்பட 350 போ் மீது டவுன் போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.