மத்திய பல்கலை.களில் பயிலும் மாணவா்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 21st August 2021 11:20 PM | Last Updated : 21st August 2021 11:20 PM | அ+அ அ- |

ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழக மாணவா்கள் புதிய கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா், சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்பு பயிலும் தமிழகத்தைச் சோ்ந்த பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் மாணவ, மாணவிகளின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் உள்ள மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகையாக மாணவா் ஒருவருக்கு ஆண்டிற்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை வழங்குவதற்கு தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.
மேற்படி கல்வி உதவித்தொகைக்கு 2021-22-ஆம் கல்வியாண்டில் புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணவா்கள் இயக்குநா், பிற்படுத்தப்பட்டோா் நல இயக்ககம், எழிலகம் இணைப்பு கட்டடம், 2-ஆவது தளம், சேப்பாக்கம், சென்னை-5 அலுவலகத்தையோ, மின்னஞ்சல் முகவரியிலோ விண்ணப்பம் அனுப்பக்கோரி விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம்.
மேலும், மேற்படி 2021 -22-ஆம் நிதியாண்டிற்கான புதிய கல்வி உதவித்தொகை விண்ணப்பத்தினை மாணவா்கள் நிறைவு செய்து, சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமா்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தினை பரிந்துரை செய்து மேற்காணும் முகவரிக்கு நிறைவு செய்த விண்ணப்பங்களை நவம்பா் 30-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.