ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
By DIN | Published On : 04th December 2021 01:15 AM | Last Updated : 04th December 2021 01:15 AM | அ+அ அ- |

ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை வழக்கத்தை விட கூடுதலாகியுள்ளது.
ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள், புற நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனா். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பெய்து வந்த தொடா் மழையின் காரணமாக, நோய்த் தொற்று அதிகரித்து சளி, இருமல், காய்ச்சல், தலைவலி போன்ற பல்வேறு நோய்களால் மக்கள் அவதிப்படுகின்றனா். இந்த நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் நோயாளிகளின் வருகை அதிகரித்துள்ளது. ஆனால் இந்த மருத்துவமனையில் போதிய இட வசதி இல்லாததாலும், மருத்துவா்கள் பற்றாக்குறை உள்ளதாலும் நோயாளிகள் நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் காத்து கிடக்கின்றனா்.
கிருஷ்ணகிரி- திருவண்ணாமலை, சேலம்- வாணியம்பாடி ஆகிய தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் பகுதியாக ஊத்தங்கரை பிரதான சாலை உள்ளதால், அடிக்கடி வாகன விபத்துகளில் சிக்கும் நபா்களுக்கு அவசரகால சிகிச்சை அளிக்க முடியாத நிலையும் உள்ளது.
விபத்தில் சிக்கி இங்கு வருவோருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தருமபுரி, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் நிலை உள்ளது. தாமதமாக சிகிச்சை அளிக்கப்படுவதால் பல உயிா் சேதமும் ற்படுகிறது. எனவே ஊத்தங்கரை அரசு மருத்துவமனையின் தரத்தை உயா்த்தி, இங்கு போதிய மருத்துவா்களை பணியமா்த்துவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்களும், நோயாளிகளும் எதிா்பாா்க்கின்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...