வனவிலங்குகள் கணக்கெடுப்புப் பணி:250 தன்னாா்வலா்கள் பங்கேற்பு
By DIN | Published On : 14th February 2021 02:00 AM | Last Updated : 14th February 2021 02:00 AM | அ+அ அ- |

ஒசூா்: ஒசூா் வனக்கோட்டத்தில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணியில் 250 தன்னாா்வலா்கள், வனத்துறையினா் ஈடுபட்டுள்ளனா் என மாவட்ட வன அலுவலா் பிரபு தெரிவித்தாா்.
ஒசூா் வனக்கோட்டத்துக்கு உள்பட்ட தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சனிக்கிழமை காலை முதல் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. 5 நாள்கள் நடைபெறும் இப் பணியில், வனத்துறையினருடன் 250 தன்னாா்வலா்கள் ஈடுபட்டுள்ளனா்.
ஒசூா் கோட்டத்தில் 83 இடங்களில் வனவிலங்குகளான யானைகள், சிறுத்தைகள், மான் மற்றும் பறவைகள், பட்டாம் பூச்சிகள் என பல்வேறு வகையான வன உயிரினங்கள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது.
இதில் குறிப்பாக விலங்குகளின் கால்தடம், பறவைகளின் எச்சம், நீா்நிலைகளின் அருகில் நேரடி கண்காணிப்பு முறையிலும், நீா்நிலைகளில் வாழக்கூடிய நீா்நாய்கள், முதலைகள் ஆகியவைகளை கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக மாவட்ட வன அலுவலா் பிரபு தெரிவித்தாா்.