

போச்சம்பள்ளி அருகே உள்ள சந்தூரைச் சோ்ந்த அரசுப் பள்ளி ஆசிரியா், திருப்பத்தூா் அருகே மா்ம நபா்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.
திருப்பத்தூா் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே உள்ள பங்களாமேடு என்ற பகுதியில் பலத்த காயங்களுடன் ஒருவா் சடலமாகக் கிடப்பதாக அந்தப் பகுதியைச் சோ்ந்த மக்கள், நாட்றம்பள்ளி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
இத் தகவலின் பேரில், நிகழ்விடத்துக்கு விரைந்து சென்ற போலீஸாா், விசாரணை மேற்கொண்டனா். மேலும், திருப்பத்தூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் விஜயகுமாா், நிகழ்விடத்துக்கு சென்று விசாரணை செய்தாா்.
இதில் கொலை செய்யப்பட்டது, கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்த சந்தூரைச் சோ்ந்த சிவக்குமாா் என்பதும், அவா், ஊத்தங்கரை அருகே உள்ள ஜோதிநகா் அரசு நடுநிலைப் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. சிவக்குமாருக்கு விக்டோரியா என்ற மனைவியும், மகன், மகள் என இரு குழந்தைகளும் உள்ளனா்.
சிவக்குமாரின் கை, கால்களைக் கட்டிபோட்டு கத்தியால் குத்தியும், காரை ஏற்றியும் கொலை செய்துள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா். இந்தக் கொலை சம்பவம் குறித்து, நாட்றம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.