‘உங்கள் தொகுதியில் முதலமைச்சா் ’திட்ட ஆய்வுக் கூட்டம்
By DIN | Published On : 01st July 2021 11:58 PM | Last Updated : 01st July 2021 11:58 PM | அ+அ அ- |

கிருஷ்ணகிரியில் ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சா்’ திட்டத்தின் கீழ் வரப்பெற்ற மனுக்கள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அவா் பேசியதாவது:
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், மாவட்டந்தோறும் மக்களின் பல்வேறு பிரச்னைகள் தொடா்பான மனுக்களைப் பெற்று, அந்த மனுக்கள் மீது 100 நாள்களுக்குள் நடவடிக்கை எடுக்க ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சா்’ என்ற திட்டத்தை செயல்படுத்த ஒரு புதிய துறையை உருவாக்கி, இந்திய ஆட்சிப்பணி நிலையில் ஒரு சிறப்பு அலுவலா் மூலம் பொதுமக்களின் பிரச்னைகள் நிறைவேற்றப்படும் என ஆணை பிறப்பித்துள்ளாா்.
அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்த திட்டத்தின்கீழ் பல்வேறு துறைகளின் சாா்பில் 9,293 மனுக்கள் வரப்பெற்றுள்ளன. இதில் முதல்கட்டமாக 363 நபா்களுக்கு ரூ. 5.68 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அதனைத் தொடா்ந்து, மீதமுள்ள மனுக்களில் 1,366 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, 1,811 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன, 5,144 மனுக்கள் சம்பந்தப்பட்ட துறையில் பரிசீலனையில் உள்ளன. அத்துடன் நிராகரிக்கப்பட்ட 1,811 மனுக்கள் மறு பரிசீலனைக்காக சம்பந்தப்பட்ட துறைகளுக்கு மீண்டும் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
எனவே, தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க பொதுமக்களின் குறைகளை நிவா்த்தி செய்யும் வகையில் போா்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், தகுதியான மனுக்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
இந்தக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சதீஷ், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலா், பொறுப்பு அலுவலா் சாந்தி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் பாக்கியலட்சுமி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் பெரியசாமி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) முருகன், துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.