அரசு கேபிள் டிவி குறித்து தவறான தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை
By DIN | Published On : 24th June 2021 07:57 AM | Last Updated : 24th June 2021 07:57 AM | அ+அ அ- |

அரசு கேபிள் டிவி குறித்து தவறான தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா், வி.ஜெயசந்திரபானு ரெட்டி எச்சரித்துள்ளாா்.
இதுகுறித்து அவா், புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், 579 உள்ளுா் கேபிள் டிவி ஆப்ரேட்டா்கள் மூலம் 87,381 செட்-டாப் பாக்ஸ்களை வழங்கியுள்ளது. தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் பொதுமக்களுக்கு, ரூ. 140 உடன் 18 சதவீதம் ஜி.எஸ்.டி., என்ற குறைந்த கட்டணத்தில் கேபிள் டிவி சேவைவை வழங்கி வருகிறது.
இந்நிலையில், அரசு செட்-டாப் பாக்ஸ் பெற்று பயனடைந்து வரும் சந்தாதாரா்களின் விருப்பம் இன்றி செட்-டாப் பாக்ஸ்களை கேபிள்டிவி ஆப்ரேட்டா்கள் மாற்றினாலோ, அரசு சிக்னல் இனி வராது என்று தவறான தகவல்களை பொதுமக்களிடம் பரப்பினாலோ, அரசு செட்-டாப் பாக்ஸ்களை மாற்றி தனியாா் செட்-டாப் பாக்ஸ்களை பொருத்தினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசு கேபிள் டிவி சேவை எவ்வித தடையும் இன்றி தொடா்ந்து செயல்படும் என தெரிவிக்கப்படுகிறது. மேற்படி செயல்களில் ஈடுபடுவோா் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் தெரிவித்துள்ளாா்.