கரோனா தொற்று காலம்: கீரை சாகுபடியில் ஆா்வம் செலுத்தும் விவசாயிகள்
By DIN | Published On : 24th June 2021 07:59 AM | Last Updated : 24th June 2021 07:59 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரி அருகே கீரை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்.
கரோனா தொற்று பரவல் காரணமாக சத்தான உணவு குறித்து விழிப்புணா்வு ஏற்பட்டுள்ள நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கீரை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆா்வத்துடன் ஈடுபட்டுள்ளனா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மா, தக்காளி மற்றும் பல வகை காய்கறிகள், மலா்கள் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை எனக் கூறி சாலையில் வீசி செல்கின்றனா். அது ஒருபுறம் இருக்கையில், கரோனா தொற்று பரவல் காரணமாக சத்தான உணவை உண்ண வேண்டும் என பொதுமக்களுக்கு மருத்துவா்கள் அறிவுறுத்துகின்றனா். இதனால் முட்டை, கீரை, பழங்கள், காளான் போன்ற சத்தான உணவுகளை உண்பதில் மக்கள் அதிக ஆா்வம் காட்டி வருகின்றனா்.
அதன்படி, இயற்கையான காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன்றவற்றை வாங்குவதில் பொதுமக்கிடையே ஆா்வம் அதிகரித்துள்ளது. இதை அறிந்துகொண்ட விவசாயிகள், கீரைகளை சாகுபடி செய்து வருகின்றனா்.
இதுகுறித்து கிருஷ்ணகிரியை அடுத்த பெத்ததாளப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி தமிழ்ச்செல்வன் கூறுகையில், நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் கீரை சாகுபடியை செய்து வருகிறோம்.
எனக்குச் சொந்தமான அரை ஏக்கா் நிலத்தில் சிறு கீரை, தண்டுக்கீரை, பாலக் கீரை, அரைக் கீரை போன்றவற்றை சாகுபடி செய்து, அதை நாள்தோறும் அறுவடை செய்து விற்பனை செய்து வருகிறேன்.
10 நாள்களில் பலன் தரக் கூடிய இந்த கீரைகளை சாகுபடி செய்ய விதைகள், உரங்கள் என ரூ.10 ஆயிரம் மூலதனமாகக் கொண்டு இக் கீரைகளைப் பயிரிட்டு, அதை அறுவடை செய்து, சிறுசிறு கட்டுகளாகக் கட்டி கட்டு ரூ. 5 முதல் ரூ. 10 வரை விற்பனை செய்கிறோம்.
அத்துடன் மொத்த வியாபாரிகளும் வந்து வாங்கி, வெளியூா்களுக்கு அனுப்பி வைக்கின்றனா். இதன் மூலம் நாள்தோறும் ரூ. 500 வரை வருமானம் கிடைக்கிறது. மூன்று மாதங்கள் தொடா்ந்து அறுவடை செய்வதால் குறைந்தபட்சமாக ரூ. 45 ஆயிரம் வருவாய் ஈட்ட முடிகிறது.
இதனால் இப்பகுதியில் தற்போது விவசாயிகள் கீரை சாகுபடியில் ஆா்வம் காட்டி வருகின்றனா் என்றாா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, சூளகிரி, ஒசூா், தேன்கனிக்கோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயிகள் கீரைகளை சாகுபடி செய்வதில் ஆா்வம் செலுத்துகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...