கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 4.10 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை
By DIN | Published On : 24th June 2021 07:55 AM | Last Updated : 24th June 2021 07:55 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வரையில் 4.10 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனை, அரசு மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியாா் மருத்துவமனைகளில் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.
மாவட்டத்தில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கரோனா பரவல் அதிகரித்து காணப்பட்டது. தினசரி 4,000-க்கும் மேற்பட்டவா்களுக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. கரோனா பரிசோதனையைப் பொறுத்தவரை கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனை, ஒசூரில் 5 இடங்களில் உள்ள ஆய்வகங்களில் மேற்கொள்ளப்படுகிறது.
தற்போது, நாள்தோறும் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 200-க்கு கீழ் குறைந்து வருகிறது. இதுபோல தினசரி கரோனா பரிசோதனை மேற்கொள்பவா்களின் எண்ணிக்கையும் பாதியாக குறைந்துள்ளது. செவ்வாய்க்கிழமை 1,942 போ் கரோனா பரிசோதனை மேற்கொண்டனா்.
இதுவரை மாவட்டத்தில் 4.10 லட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் கரோனா பரிசோதனை மேற்கொண்டனா். அதில், 38,883 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டு 37,328 போ் சிகிச்சையில் குணமடைந்துள்ளனா். 288 போ் உயிரிழந்துள்ளனா்; 1,357 போ் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்; மேலும், 67 போ் கருப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா் என சுகதாரத் துறையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.