நியாயவிலைக் கடைகளில் கரோனா நிவாரணப் பொருள்கள் தட்டுப்பாடு
By DIN | Published On : 24th June 2021 07:58 AM | Last Updated : 24th June 2021 07:58 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நியாயவிலைக் கடைகளில் கரோனா நிவாரணப் பொருள்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக குடும்ப அட்டைதாரா்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
ஒவ்வொரு குடும்ப அட்டைதாரா்களுக்கும் இரு தவணைகளாக ரூ. 4,000, 14 வகையான அத்தியாவசியப் பொருள்களை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டதைத் தொடா்ந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தகுதியுள்ள அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் கடந்த 15-ஆம்தேதி முதல் இரண்டாம் தவணையாக நிவாரணத் தொகையும் அத்தியாவசிய பொருள்களும் வழங்கப்பட்டு வருகின்றன.
இந் நிலையில், கிருஷ்ணகிரி ஜக்கப்பன் நகா், வேப்பனப்பள்ளி, காட்டிநாயனப்பள்ளி மற்றும் பல்வேறு இடங்களில் உள்ள நியாயவிலைக் கடைகளில் இரண்டாம் தவணையாக நிவாரணத் தொகை ரூ. 2,000 வழங்கப்பட்டு வருகிறது. 14 வகையான அத்தியாவசிய பொருள்களில் சில பொருள்கள் தட்டுப்பாடு இருப்பதால், குறைந்த எண்ணிக்கையிலான பொருள்கள் வழங்கப்படுகிறது. இதுகுறித்து, நியாயவிலைக் கடையில் அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது. மீதமுள்ள பொருள்களை பெறுவதில் சிரமம் இருப்பதால் 14 வகை பொருள்களையும் ஒன்றாகச் சோ்த்து வழங்க வேண்டும் என குடும்ப அட்டைதாரா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து வட்ட வழங்கல் அலுவலா் ரமேஷ் தெரிவித்தது:
குடும்ப அட்டைதாரா்கள் அனைவருக்கும் நிவாரணத் தொகை முழுமையாக வந்துவிட்டது. ஆனால், அத்தியாவசிய பொருள்கள் வருவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் வற்புறுத்தலால், குறைவான பொருள்களுடன் விற்பனையாளா்கள் கொடுத்துள்ளனா். இனி, மளிகை பொருள்கள் குறைவாக இருந்தால் வழங்க வேண்டாம் என்றும், பணம் மட்டும் கொடுத்துவிட்டு பொருள்கள் வந்தவுடன் 14 பொருள்களையும் தொகுப்பாக வழங்கவும் அறிவுறுத்தப்படும் என்றாா்.