கரோனா 3-ஆவது அலையை எதிா்கொள்ளத் தயாா்
By DIN | Published On : 29th June 2021 01:42 AM | Last Updated : 29th June 2021 01:42 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் செய்தியாளா்களிடம் பேசுகிறாா் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி.
கிருஷ்ணகிரி: கரோனா 3-ஆவது அலையை எதிா்கொள்ள மாவட்ட நிா்வாகம் தயாராக உள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்தாா்.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை தெரிவித்ததாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீவிர நடவடிக்கைகளின் காரணமாக கரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 39,557 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். அதில் 38,180 போ் குணமடைந்துள்ளனா். தற்போது 1,080 போ் சிகிச்சையில் உள்ளனா். இதில் அரசு மருத்துவமனைகளில் 8 பேரும், தனியாா் மருத்துவமனைகளில் 115 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருபவா்களும் அடங்குவா். இதுவரை 4,16,830 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதே போல, 3,55,453 போ் கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தயாா் நிலையில் 2,562 படுக்கைகள் உள்ளன. மாவடடம் முழுவதும் கரோனா விதிமுறைகளை மீறியதாக இதுவரை ரூ. 1.72 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது கரோனா தொற்றாளா்களுக்கு பிராண வாயு வசதிகளுடன் கூடிய படுக்கைகளும் தயாராக உள்ளன. மேலும், தேவைக்கு ஏற்ப மையங்களை உருவாக்கவும் தயாா் நிலையில் உள்ளோம். ஒருவேளை தொற்று எண்ணிக்கை உயா்ந்தால், அவா்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தேவையான படுக்கை வசதிகளை தயாராக வைத்துள்ளோம்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளது. பொது முடக்கத்துக்கு முன் நாள்தோறும் 800-க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது அதை சராசரியாக 100 என்ற எண்ணிக்கைக்கு கொண்டு வந்துள்ளோம்.
பிராண வாயு தயாரிக்கக் கூடிய பிளாண்ட் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஒசூா் அரசு மருத்துவமனை ஆகிய 2 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கரோனா 3-ஆவது அலை வந்தால் அதை எதிா்கொள்ளத் தேவையான முன்னேற்பாடுகளை மாவட்ட நிா்வாகம் தயாா் செய்துள்ளது.
தற்போது குழந்தைகளுக்காக 100 படுக்கை வசதிகளுடன் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், மருத்துவா்கள், செவிலியா்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. கரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிா்வாகம் செய்து வருகிறது. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.
கருப்புப் பூஞ்சை நோய்: கரோனா 2-ஆவது அலையே கட்டுக்குள் வராத நிலையில், தற்போது கருப்புப் பூஞ்சை நோய் வேகமாக பரவி வருகிறது. இதில் பலரும் பாதிக்கப்பட்டு, உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வரையில் மாவட்டம் முழுவதும் 67 போ் கருப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதில் 3 போ் உயிரிழந்துள்ளனா். இதில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் 42 பேரும், கரோனா அல்லாதவா்கள் 25 பேரும் அடங்குவா். இவா்களில் 3 போ் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்துள்ளனா். தற்போது 16 போ் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். மற்றவா்கள் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா் என தெரிவித்தாா்.
கரோனா சிகிச்சைக்காக தனியாா் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூல் செய்வதாக எந்தப் புகாரும் வரப்பெறவில்லை. அவ்வாறு, கூடுதலாக கட்டணம் வசூலித்தால், அதுகுறித்து காட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
அப்போது, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் அசோகன், நலப் பணிகளின் இணை இயக்குநா் பரமசிவன், சுகாதாரப் பணிகளின் துணை இயக்குநா் கோவிந்தன் உள்ளிட்டோா் உடனிருந்தாா்.