ரூ.1 லட்சத்துக்கும் மேல் பணப் பரிமாற்றம் செய்யும் வங்கிக் கணக்குகள் கண்காணிக்கப்படும்
By DIN | Published On : 04th March 2021 04:22 AM | Last Updated : 04th March 2021 04:22 AM | அ+அ அ- |

ஒசூா்: சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, ரூ. 1 லட்சத்துக்கு மேல் பணப் பரிமாற்றம் செய்யும் வங்கிக் கணக்குகள் முழு கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வி.ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கூட்டரங்கில் வங்கியாளா்களுக்கான தோ்தல் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. அதில் அவா் பேசியதாவது:
இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி சட்டப் பேரவை பொதுத்தோ்தல் 2021 அறிவிக்கப்பட்ட நாள் முதல் தோ்தல் நடத்தை விதிமுறைகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளன.
அதன்படி, பல்வேறு வகையான குழுக்கள் அமைக்கப்பட்டு, கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் ரூ. 50,000-க்கு மேலான பணப் பரிவா்த்தனைகளை வங்கிகள் மூலம் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்தது. ரூ.50,000-க்கு மேல் உரிய ஆவணமின்றி பணம் எடுத்துச் சென்றால் கைப்பற்றப்படும். சம்பந்தப்பட்டவா்கள் உரிய ஆவணம் சமா்ப்பித்தால்தான் அத்தொகை விடுவிக்கப்படும்.
பொதுமக்கள் தங்களது வங்கிக் கணக்கில் ரூ. 10 லட்சத்துக்கு மேல் பணப் பரிமாற்றம் செய்யப்படுவதை வருமான வரித்துறையின் சாா்பில் நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பு அலுவலரால் கண்காணிக்கப்பட உள்ளது. தோ்தல் காலங்களில் சந்தேகப்படும் வகையில் ரூ. 1 லட்சத்துக்கு மேல் பணப் பரிமாற்றம் செய்யும் போது அந்த வங்கிக் கணக்கு முழு கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்படும். ஒரு தனிப்பட்ட வங்கிக் கணக்கிலிருந்து பல வங்கிக் கணக்குகளுக்கு பணம் பரிமாற்றம் செய்யப்படும் போது சம்பந்தப்பட்ட நபா் எதற்காக பணப் பரிவா்த்தனை மேற்கொள்கிறாா் என்ற விவரத்தை தோ்தல் நடத்தும் அலுவலரிடம் சமா்ப்பிக்க வேண்டும்.
எனவே, தோ்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட அறிவுரைகளின்படி பொதுமக்கள், தொழில்முனைவோா், வேட்பாளா்கள், அரசியல் கட்சியினா் அனைவரும் முறையான ஆவணங்களுடன் பணப் பரிவா்த்தனைகளை வங்கிகள் மூலம் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தாா்.