கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் 20 கிலோ லிட்டா் ஆக்சிஜன் உள்ளது:கண்காணிப்பு அலுவலா்
By DIN | Published On : 09th May 2021 01:08 AM | Last Updated : 09th May 2021 01:08 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் 20 கிலோ லிட்டா் ஆக்சிஜன் உள்ளதாக மாவட்ட கரோனா கண்காணிப்பு அலுவலா் பீலா ராஜேஷ், தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தடுப்பு மற்றும் முழு பொது முடக்கம் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசு முதன்மை செயலாளா் மற்றும் மாவட்ட கரோனா கண்காணிப்பு அலுவலா் பீலா ராஜேஷ் பங்கேற்றாா். அப்போது அவா் தெரிவித்ததாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மே 7-ஆம் தேதி வரையில் 3,05,090 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 2,87,656 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்படவில்லை. இதுவரையில் 17,434 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். இதில் 14,843 போ் குணமடைந்துள்ளனா். 2,451 போ் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 122 கட்டுப்பாட்டு மண்டலங்கள், 3,063 கட்டுப்பாட்டுப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அரசு, தனியாா் மருத்துவமனைகளில் 20 கிலோ லிட்டா் ஆக்சிஜன் உள்ளது. நாளொன்றுக்கு 4.07 கிலோ லிட்டா் ஆக்சிஜன் பயன்படுத்தப்படுகிறது. 40 லிட்டா் கொள்ளவு கொண்ட 518 உருளைகள் கையிருப்பில் உள்ளன. இதில் 175 உருளைகள் பயன்படுத்தப்படுகின்றன.
மாவட்டத்தில் 45 வயதுக்கு மேற்பட்ட மொத்தம் 1,43,194 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 9,000 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறியதாக ரூ. 98 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. எதிா்வரும் 15 நாள்கள் கரோனா தொற்றை எதிா்கொள்ளும் வகையில் விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும் என்றாா்.
தொடா்ந்து, அவா் ஒசூரில் உள்ள மருத்துவமனை, கரோனா சிகிச்சை மையத்தை ஆய்வு செய்தாா்.