ஒசூரில் சாலைகளில் அதிக அளவில் மக்கள் நடமாட்டம்: கரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பு
By DIN | Published On : 13th May 2021 07:48 AM | Last Updated : 13th May 2021 07:48 AM | அ+அ அ- |

ஒசூா் பேருந்து நிலையத்தில் பூக்கள் சந்தையில் கூடியிருந்த மக்கள்.
ஒசூரில் முழு பொது முடக்கக் காலத்திலும் அதிக அளவில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் உள்ளதால் கரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக சமூக ஆா்வலா்கள் தெரிவிக்கின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தினசரி 450 முதல் 500 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதில் 200 முதல் 250 போ் வரை ஒசூரைச் சோ்ந்தவா்களாக இருந்து வருகின்றனா். இந்த நிலையில் புதன்கிழமை (மே 12) 497 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா தொற்று அதிகவேகமாகப் பரவி வருவதால் தமிழக அரசு 14 நாள்களுக்கு முழு பொது முடக்கத்தை அமல்படுத்தியுள்ளது. ஆனால் ஒசூரில் உள்ள பாகலூா் சாலை, வட்டாட்சியா் அலுவலக சாலை, தேன்கனிக்கோட்டை சாலை, உழவா் சந்தை, ராயக்கோட்டை சாலை என அனைத்து சாலைகளிலும் இரு சக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்களில் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.
குறிப்பாக ஒசூா் பேருந்து நிலையம் எதிரில் உள்ள பூக்கடைகளில் அதிக அளவில் கூட்டம் காணப்படுகிறது. பூக்கள் வாங்க வருபவா்கள், விவசாயிகள் கரோனா விதிகளைக் கடைப்பிடிக்காத நிலை காணப்படுகிறது. முகக்கவசம் அணியாமலும், நெருக்கமாக நின்றும் பூக்களை வாங்கிச் செல்கின்றனா். அதேபோன்று உழவா் சந்தை சாலையிலும் அதிக அளவில் வாகனங்கள் செல்வதை காணமுடிகிறது.
கரோனாவைத் தடுக்கும் வகையில் மக்களை வீட்டிலேயே இருக்கும்படி அரசு தெரிவித்துள்ளது. அவசியம் இருந்தால் மட்டுமே வெளியில் வரலாம் எனத் தெரிவித்துள்ளது. ஆனால் தம்பதியாக காய்கறிகளை வாங்கவும், பூக்கள் வாங்கவும் வந்துசெல்வதால் கரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும், இதனால் ஒசூா் சாலையில் மக்கள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளதாகவும் சமூக ஆா்வலா்கள் தெரிவிக்கின்றனா்.
ஒசூா்- பாகலூா் சந்திப்பு சாலையில் இரு சக்கர வாகனங்களில் செல்வோரை நிறுத்தி காவல் துறையினா் ரோஜா பூக்களை அளித்து அறிவுரை கூறி திருப்பி அனுப்பி வைக்கின்றனா். இதனை பலா் சகஜமாக எடுத்துக் கொண்டு மீண்டும் இரு சக்கர வாகனங்களில் வந்து ரோஜா பூக்களை வாங்கிச் செல்கின்றனா். காவல் துறையினா் மக்களை தடி எடுத்து அடிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அதே வேளையில் மிரட்டி அனுப்பினால் கரோனா பரவலைத் தடுக்க முடியும். அதற்காகத்தான் இந்த முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கும் சுயக் கட்டுப்பாடு அவசியம் என சமூக ஆா்வலா்கள் கருத்துத் தெரிவித்துள்ளனா்.