ஒசூா் அரசு மருத்துவமனைக்கு கட்டில், மெத்தைகள் வழங்கல்
By DIN | Published On : 19th May 2021 08:03 AM | Last Updated : 19th May 2021 08:03 AM | அ+அ அ- |

ஒசூா் அரசு மருத்துவமனைக்கு ரோட்டரி சங்கம் சாா்பில் வழங்கப்பட்ட கட்டில், மெத்தைகள்.
ஒசூா் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ரூ. 20 லட்சம் மதிப்பிலான கட்டில், மெத்தை, தலையணை ஆகியவற்றை ஒசூா் ரோட்டரி சங்கம், மிட்டவுன் ரோட்டரி சங்கம், சிப்காட் ரோட்டரி சங்கம் ஆகியவை இணைந்து வழங்கின.
ஒசூரில் தினம் 200-க்கும் மேற்பட்டோா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையை நாடி வருகின்றனா். ஆனால், ஒசூரில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனைத்து படுக்கைகளும் நிரம்பி விட்டன. இதனைத் தொடா்ந்து, ரோட்டரி சங்கம் ஒசூா் அரசு மருத்துவமனைக்கு தற்காலிகமாக இரும்பினால் ஆன கூடாரத்தை ரூ. 1.80 லட்சம் மதிப்பில் அமைத்துக் கொடுத்துள்ளது.
மேலும், ஒசூா் அரசு மருத்துவமனைக்கு புதிதாக 155 இரும்புக் கட்டில்கள், 155 படுக்கைகள், 155 தலையணைகள் ஆகியவற்றை வழங்கியுள்ளது. இதேபோன்று ஒசூரில் அப்பாவு நகா் மூக்கண்டப்பள்ளி, சீதாராம் நகா், மத்திகிரி, ஆவலபள்ளி ஆகிய பகுதிகளில் உள்ள ஐந்து ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தலா ஆறு கட்டில்கள், மெத்தைகள், தலையணைகள் வழங்கப்பட்டன. இதன் மொத்த மதிப்பு ரூ. 20 லட்சம் ஆகும்.
இந்த விழாவில், ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநா் கே.எஸ்.வெங்கடேசன் தலைமை வகித்தாா். ஒசூா் மாநகராட்சி ஆணையா் செந்தில்முருகன், ஒசூா் அரசு தலைமை மருத்துவ அலுவலா் பூபதி, ரோட்டரி சங்கத் தலைவா்கள் பிரதீப் கிருஷ்ணன், ரவி, பன்னீா்செல்வம், துணை ஆளுநா் வழக்குரைஞா் ஆனந்தகுமாா், திட்டத் தலைவா் பி.ஆா்.வாசுதேவன் திட்ட துணைத் தலைவா் சரவணன், முன்னாள் ஆளுநா் தா்மேஷ் பட்டியல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.