தனியாா் மருத்துவமனைகளில் கரோனா பரிசோதனை, சிகிச்சைக் கட்டணம் அறிவிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தனியாா் மருத்துவமனைகளில் கரோனா பரிசோதனை, சிகிச்சைக் கட்டணங்கள் குறித்த விவரங்களை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளாா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தனியாா் மருத்துவமனைகளில் கரோனா பரிசோதனை, சிகிச்சைக் கட்டணங்கள் குறித்த விவரங்களை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளாா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தனியாா் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் கரோனா தொற்று பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கான கட்டணத்தை முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் (அரசுப் பணியாளா்களுக்கும், பொது மக்களுக்கும்) மூலம் அரசு வழங்கி வருகிறது.

தமிழக முதல்வா் தனியாா் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கான கட்டணம் மிக அதிகமாக இருப்பதை கருத்தில் கொண்டு மருத்துவமனைகளுக்கு இடையே கட்டண வேறுபாடுகள் அதிகமாக இருப்பதாக வரப்பெற்ற புகாா்களைத் தொடா்ந்து, தனியாா் மருத்துவமனைகளில் கரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கான கட்டணத்தை முறைப்படுத்தி ஆணையிட்டுள்ளாா்.

அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆா்.டி.பி.சி.ஆா். (கரோனா) பரிசோதனைக்கு பொதுமக்களிடம் ரூ. 3,000, முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் ரூ. 2,500-ம், வீட்டுக்கு வந்து பரிசோதனை செய்தால் கூடுதலாக ரூ. 500-ம் கட்டணம் பெற்றுக் கொள்ளலாம்.

சாதாரண சிகிச்சைக்கு அனைத்துதர மருத்துவமனைகளுக்கும் நாள் ஒன்றுக்கு ரூ. 5,000 கட்டணம் ஆகும். செயற்கை சுவாச தொழில்நுட்ப வசதி இல்லாமல் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு நாள் ஒன்றுக்கு ஏ1, ஏ2 தர மருத்துவமனைகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 10,000, ஏ3 - ஏ6 தர மருத்துவமனைகளுக்கு ரூ. 9,000 கட்டணம் ஆகும்.

செயற்கை சுவாச தொழில்நுட்ப வசதியுடன் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு ஏ1, ஏ2 தர மருத்துவமனைக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 14,000, ஏ3 - ஏ6 தர மருத்துவமனைகளுக்கு ரூ. 12,600 கட்டணம் ஆகும்.

நச்சுத் தொற்று இருந்து செயற்கை சுவாச தொழில்நுட்ப வசதி இல்லாமல் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு நாள் ஒன்றுக்கு ஏ1, ஏ2 தர மருத்துவமனைக்கு ரூ. 11,000, ஏ3 - ஏ6 தர மருத்துவமனைகளுக்கு ரூ. 9,900 கட்டணம் ஆகும். நச்சுத் தொற்று இருந்து செயற்கை சுவாச தொழில்நுட்ப வசதியுடன் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு நாள் ஒன்றுக்கு ஏ1, ஏ2 தர மருத்துவமனைகளுக்கு ரூ. 15,000, ஏ3 - ஏ6 தர மருத்துவமனைகளுக்கு ரூ. 13,500 கட்டணம் ஆகும். பல்லுறுப்பு செயல் இழந்த நிலையில், நாள் ஒன்றுக்கு ஏ1, ஏ2 தர மருத்துவமனைகளுக்கு ரூ. 15,000, அதே போல ஏ3- ஏ6 தர மருத்துவமனைகளுக்கு ரூ. 13,500 கட்டணம் ஆகும்.

எனவே, அனைத்து தனியாா் மருத்துவமனைகளும், மேற்குறிப்பிட்ட தமிழ்நாடு அரசின் பரிந்துரையின்படி கரோனா சிகிச்சைக் கட்டணம் பெற்றுக் கொள்ளலாம். அதற்கு மேல் கூடுதலாக கட்டணம் பெறக் கூடாது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com