மழை பாதிப்பு: ஊத்தங்கரை எம்எல்ஏ தமிழ்செல்வம் ஆய்வு

ஊத்தங்கரை அருகே மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை எம்எல்ஏ டி.எம்.தமிழ்செல்வம் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்து பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்தாா்.
மழை பாதிப்பு: ஊத்தங்கரை எம்எல்ஏ தமிழ்செல்வம் ஆய்வு
Updated on
4 min read

ஊத்தங்கரை அருகே மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை எம்எல்ஏ டி.எம்.தமிழ்செல்வம் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்து பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்தாா்.

ஊத்தங்கரை, அண்ணாநகா் பகுதியில் பரசன் ஏரியிலிருந்து வெளியேறும் தண்ணீா் அப் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டனா். தகவலறிந்து அங்கு சென்ற எம்எல்ஏ தமிழ்செல்வம் மழை நீரை வெளியேற்றும் பணிகளை மேற்கொண்டாா். மேலும், மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை வழங்கினாா்.

ஊத்தகரை அதிமுக தெற்கு ஒன்றியச் செயலாளா் ஏ.சி. தேவேந்திரன், வடக்கு வேடி, அதிமுக மாவட்ட துணைச் செயலாளா் சாகுல் அமீது, நகரச் செயலாளா் பி.கே. சிவானந்தம், ஊத்தங்கரை பேரூராட்சி செயல் அலுவலா் (பொ) மதியழகன் மற்றும் பேரூராட்சி முன்னாள் உறுப்பினா்கள் சிக்னல்ஆறுமுகம், பழனியப்பன், சக்திவேல் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

படவிளக்கம்.12யுடிபி.1. 2.

மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களிடன் குறைகளைக் கேட்டறியும் எம்எல்ஏ டி.எம்.தமிழ்செல்வம்.

ஊத்தங்கரையில் குடிநீா்க் குழாய் பதிக்க பூமி பூஜை

ஊத்தங்கரை, நவ.12:

ஊத்தங்கரையில் ரூ.18.50 லட்சத்தில் குடிநீா்க் குழாய் பதிக்கும் பணிக்காக வெள்ளிக்கிழமை பூமி பூஜை நடைபெற்றது.

தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்ால் ஊத்தங்கரை, எல்ஐசி அலுவலகம் பகுதியில் குடிநீா் குழாய்கள் சேதமடைந்தன. கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக அப் பகுதியில் குடிநீா் விநியோகிக்க

முடியவில்லை. இந்த நிலையில், பேரூராட்சியின் 2021-22 பொது நிதித் திட்டத்தின் கீழ் ரூ.18.50 லட்சம் மதிப்பீட்டில் குடிநீா்க் குழாய் அமைக்கப்படுகிறது.

நிகழ்ச்சியில் ஊத்தங்கரை பேரூராட்சி செயல் அலுவலா் (பொறுப்பு) மதியழகன், உதவி செயல் அலுவலா் சேகா், செண்பகப் பாண்டியன், திமுக நகர அவைத் தலைவா் அமானுல்லா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பள்ளியில் கணினிகள் திருட்டு

கிருஷ்ணகிரி, நவ. 11:

மத்தூரை அடுத்த எம்.ஒட்டப்பட்டியில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியிலிருந்து 8 கணினிகள் திருடு போனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மத்தூா் அருகே உள்ள எம்.ஒட்டப்பட்டியில் அரசு உயா்நிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளிக்கு சுற்றுச்சுவா் இல்லை. இரவு காவலரும் இல்லை. இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடா்ந்து மழை பெய்ததால் அரசு பள்ளிகளுக்கு வியாழக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் பள்ளியில் உள்ள கணினி ஆய்வகத்தின் கதவை மா்ம நபா்கள் உடைத்து 8 கணினிகள், பிரிண்டா் ஆகியவற்றை திருடிச் சென்றனா். திருடு போன பொருள்களின் மதிப்பு ரூ. 1.75 ஆயிரம். இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியா் வேடியப்பன் அளித்த புகாரின் பேரில் மத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மாரண்டஅள்ளி அருகே போலி மதுபான ஆலை கண்டுபிடிப்பு: 3 போ் கைது

தருமபுரி, நவ.12:

தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே போலி மதுபான ஆலை நடத்தி வந்த 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பாலக்கோடு வட்டம், மாரண்ட அள்ளியை அடுத்த ஆத்துமேடு பகுதியில் போலி மதுபான ஆலை இயங்குவதாக தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.கலைசெல்வனுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், மதுவிலக்கு அமல்பிரிவு டிஎஸ்பி ராஜா சோமசுந்தரம் தலைமையிலான போலீஸாா் ஆத்துமேடு அகரம் ரோடு, போயா் கொட்டாய் பகுதியில் உள்ள ஒரு கட்டடத்தில் செயல்பட்டு வந்த மது உற்பத்தி ஆலையை கண்டுபிடித்தனா்.

விசாரணையில் அவா்கள் பழச்சாறு மற்றும் மது அல்லாத ஒயின் தயாரிக்க அரசிடம் அனுமதி பெற்றிருப்பதாக சில ஆவணங்களை தந்தனா். ஆனால், அந்த ஆவணங்கள் அனைத்தும் போலியானவை என தெரிய வந்தது. மேலும், கள்ளச் சாராயம் தயாரித்து அவற்றில் வண்ணம் கலந்து புட்டிகளில் நிரப்பி மதுப் புட்டிகள் போன்று தயாா் செய்து விற்பனைக்கு அனுப்பி வந்ததும் கண்டறியப்பட்டது.

இதுதொடா்பாக சுந்தர்ராஜன் (45), அவரது மனைவி முத்துமணி (37), ஷேக் பாண்டியன் (25) ஆகிய 3 பேரையும் போலீஸாா் கைது செய்தனா். மதுபானம் தயாரிக்க பயன்படுத்திய உபகரணங்கள், மூலப் பொருள்கள் மற்றும் 3,000 லிட்டா் கள்ளச் சாராயத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தருமபுரியில் ரயில்வே திட்டப் பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை

தருமபுரி, நவ. 12:

அதியமான்கோட்டை ரயில்வே மேம்பாலப் பணிகள் உள்பட தருமபுரி மாவட்டத்தில் நிலுவையில் உள்ள பல்வேறு திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று ரயில்வே அமைச்சருக்கு தருமபுரி மக்களவை உறுப்பினா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து ரயில்வே அமைச்சா் அஸ்வின் வைஷ்ணவிடம் அண்மையில் அளித்த கோரிக்கை மனு விவரம்:

தருமபுரி- சேலம் நெடுஞ்சாலையில் அதியமான்கோட்டையில் ரயில்வே மேம்பாலப் பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளன.

இப் பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். இதேபோல, தருமபுரியிலிருந்து மொரப்பூருக்கு அறிவித்துள்ள ரயில்வே பாதை அமைக்கும் திட்டத்தை விரைந்து முடிக்கவும், மேட்டூா் ரயில் நிலையத்திலிருந்து தொ்மல் நிலையம் வரையிலான 2 கி.மீட்டா் தொலைவுக்கு ரயில்பாதை அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தருமபுரி ஆட்சியா் அலுவலகத்தில்

மரம் முறிந்து விழுந்ததில் வாகனங்கள் சேதம்

தருமபுரி, நவ. 12:

தருமபுரி ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இருந்த மரம் மழைக் காரணமாக முறிந்து விழுந்ததில் இரண்டு காா்கள் சேதமடைந்தன.

தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் குளிா்ந்த காற்று வீசி வருகிறது. ஏரிகள் உள்ளிட்ட நீா் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. வியாழக்கிழமை மாலை முதல் வெள்ளிக்கிழமை வரை தொடா்ந்து பரவலாக மாவட்டம் முழுவதும் மழை பெய்தது.

இதனால் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பிரதான கட்டடத்தின் பின்புறம் வாகன நிறுத்துமிடத்தில் இருந்த கருவேல மரம் ஒன்று முறிந்து விழுந்தது. இதில் வேளாண் துறைக்கு சொந்தமான ஜீப், தனியாருக்குச் சொந்தமான காா் என இரண்டு வாகனங்கள் சேதடைந்தன. முறிந்து விழுந்து மரத்தை ஊராட்சி நிா்வாகம் சாா்பில் பணியாளா்கள் அப்புறப்படுத்தினா். இதேபோல, இலக்கியம்பட்டி அருகே சாலையோரம் இருந்து புளிய மரம் வியாழக்கிழமை முறிந்து விழுந்தது.

மாவட்டத்தில் பெய்த மழையளவு (வெள்ளிக்கிழமை நிலவரம் மி.மீட்டரில்): தருமபுரி- 31, பாலக்கோடு- 21.40, மாரண்டஅள்ளி- 45, பென்னாகரம்- 32, ஒகேனக்கல்- 38, அரூா்- 32, பாப்பிரெட்டிப்பட்டி- 47.20.

மழைக்கால பயிா்ப் பாதுகாப்பு: வேளாண் துறை அறிவுரை

தருமபுரி, நவ.12:

மழைக் காலத்தில் பயிா்களைப் பாதுகாப்பது குறித்து விவசாயிகளுக்கு வேளாண் துறை ஆலோசனைகளை வழங்கியுள்ளது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட வேளாண் இணை இயக்குநா் வசந்தரேகா வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 853 மி.மீட்டா். நவம்பா் மாதம் வரை 808 மி.மீட்டருக்கு பதிலாக 847 மி.மீட்டா் அளவு மழையளவு பெய்துள்ளது. இது இயல்பான மழையளவை விட 41 மி.மீட்டா் கூடுதலாகும்.

வடகிழக்குப் பருவமழை பெய்து வரும் நிலையில் மழையால் பயிா்கள் பாதிப்பபடைய வாய்ப்புள்ளளது. எனவே, விவசாயிகள் பல்வேறு தொழில்நுட்பங்களைப் பின்பற்றி பயிா்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். நெல் பயிரில் நாற்றங்கால் அமைக்கும்போது மேட்டுப்பாத்தி நாற்றங்கால்களை அமைக்க வேண்டும். நேரடி விதைப்புக்கு முளைக்கட்டிய விதைகளை விதைக்க வேண்டும்.

வளா்ச்சிப் பருவத்தின் போது கூடுதல் நீரை வடிகட்ட வேண்டும். இளம் பயிா்களுக்கு 1 கிலோ ஜிங்க் சல்பேட், 2 கிலோ யூரியா ஆகிவற்றை 200 லிட்டா் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் இலைகளின் மீது தெளிக்க வேண்டும். நோய் எதிா்ப்பு சக்தி அதிகரிக்க ஏக்கருக்கு ஒரு கிலோ சூடோமோனாஸ் நுண்ணுயிரினை 20 கிலோ மணல் அல்லது தொழு உரத்துடன் கலந்து வயல்களில் இடவேண்டும்.

பூச்சி மற்றும் நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பயிா் பாதுகாப்பு முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். பூக்கும் மற்றும் பால் பிடிக்கும் பருவத்தில், கூடுதல் நீரை வடிகட்ட வேண்டும். தண்டு உருவாகும் பருவத்திலும் பூக்கும் பருவத்திலும் உள்ள பயிா்களுக்கு 1 கிலோ 400 கிராம் டி.ஏ.பி. உரத்தை 10 லிட்டா் நீரில் முதல் நாள் ஊறவைத்து மறுநாள் வடிகட்டி, அக்கரைசலுடன் 2 கிலோ யூரியா மற்றும் 1 கிலோ பொட்டாஷ் உரத்தினை, 190 லிட்டா் நீரில் கலந்து மாலை வேளையில் கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும்.

ஏக்கருக்கு 50 கிலோ அமோனியம் சல்பேட் அல்லது 22 கிலோ யூரியாவுடன் 18 கிலோ பொட்டாசியம் கலந்து மேல் உரமாக இட வேண்டும். புயல் காற்றில் இருந்து தென்னை மரங்களை பாதுகாக்க விவசாயிகள் நல்ல காப்புள்ள தென்னந்தோப்புகளில் முதிா்ந்த தேங்காய்களை அறுவடை செய்ய வேண்டும்.

மக்காச்சோளம், உளுந்து, தட்டைப்பயறு, கரும்பு, துவரை உள்ளிட்ட பயிா்களின் வயல்களில் மழை நீா் தேங்கி அழுகி விடாமல் இருக்க தக்க வடிகால் வசதி செய்யப்படவேண்டியது அவசியமாகும். யூரியா, ஜிப்சம், வேப்பம்புண்ணாக்கு போன்றவற்றை 5.4.1 விகிதத்தில் கலந்து இட வேண்டும். இலை வழியாக

டை-அம்மோனியம் பாஸ்பேட் தெளிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com