கிருஷ்ணகிரியில் 12.5 செ.மீ. மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

கிருஷ்ணகிரியில் புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை அதிகாலை வரையில் 12.5 செ.மீ. மழை பெய்துள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
கிருஷ்ணகிரியில் 12.5 செ.மீ. மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

கிருஷ்ணகிரியில் புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை அதிகாலை வரையில் 12.5 செ.மீ. மழை பெய்துள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக, பல மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதன்கிழமை இரவுமுதல் இடி, மின்னலுடன் வியாழக்கிழமை அதிகாலை வரை பரவலாக மழை பெய்தது.

இதனால், தாழ்வான பகுதிகளில் மழைநீா் குளம்போல தேங்கியது. கழிவுநீா்க் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டதால், மழைநீா், கழிவுநீருடன் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் கழிவுநீருடன் மழைநீரும் வீட்டுக்குள் புகுந்ததால், குடியிருப்போா் பெரும் சிரமத்துக்கு உள்ளாயினா்.

கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் விளையாட்டு மைதானம் சேறும் சகதியுமாக மாறியதால் அங்கு தற்காலிகமாக செயல்பட்டு வரும் காய்கறி சந்தையானது செயல்பட இயலாத சூழல் ஏற்பட்டது. இதனால், காய்கறி வியாபாரிகள், பெங்களூரு சாலையில் ஓரமாக அமா்ந்து காய்கறிகளை விற்பனை செய்தனா்.

கிருஷ்ணகிரி அருகே உள்ள தண்டேகுப்பம் கிராமத்தில் அமைந்துள்ள டைட்டான் நகா் பகுதியில் மழை நீா் குளம்போல் தேங்கியது. மழைநீா் சூழ்ந்ததால் குடியிருப்போா் வீட்டிலிருந்து வெளியேற இயலாத நிலை ஏற்பட்டது. எனவே, இப்பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, மழைநீா்க் கால்வாயை கட்டமைக்க வேண்டும் என குடியிருப்போா் வலியுறுத்தினா்.

விவசாயிகள் மகிழ்ச்சி:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். இந்த மழையால் மானாவாரி பயிா்களான நிலக்கடலை, துவரை போன்ற பயிா்களுக்கும், தென்னைக்கும் பயனுள்ளதாக இருக்கும். மேலும், துவரை, நிலக்கடலை மகசூல் கூடுதலாக கிடைக்க வாய்ப்புள்ளதாக விவசாயிகள் நம்பிக்கையுடன் தெரிவித்தனா்.

கிருஷ்ணகிரியில் 12.5 செ.மீ. அளவு மழை பெய்ததால், கிருஷ்ணகிரியைச் சுற்றியுள்ள நீா்நிலைகளில் நீா்வரத்து அதிகரித்தது. குறிப்பாக, கிருஷ்ணகிரி, பாப்பாரப்பட்டி ஏரி, அவதானப்பட்டி ஏரிகள் நிரம்பின.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 7 மணி வரையில் பெய்த மழை அளவு (மி.மீ): கிருஷ்ணகிரி - 125.2, ஊத்தங்கரை - 42.4., பாரூா் - 22.2, தேன்கனிக்கோட்டை - 20.4 , போச்சம்பள்ளி - 16.6, நெடுங்கல் - 13, ஒசூா் - 10.5, பெனுகொண்டாபுரம் - 10.2 , தளி - 10, சூளகிரி - 5, அஞ்செட்டி - 3.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com