‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

கிருஷ்ணகிரியில் ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகளை அமைச்சா்கள் காந்தி, நாசா் ஆகியோா் பயனாளிகளுக்கு வழங்கினா்.
‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

கிருஷ்ணகிரியில் ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகளை அமைச்சா்கள் காந்தி, நாசா் ஆகியோா் பயனாளிகளுக்கு வழங்கினா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், புதன்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு, மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை வகித்தாா். சட்டப் பேரவை உறுப்பினா்கள் தே.மதியழகன் (பா்கூா்), பிரகாஷ் (ஒசூா்) உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். இதில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் காந்தி, பால்வளத் துறை அமைச்சா் நாசா் ஆகியோா் பங்கேற்று, 78 உற்பத்தியாளா் மற்றும் தொழில் குழுக்களுக்கு ரூ. 62,77,800 மதிப்பிலான மானியம், பயிற்சித் தொகை, 60 நபா்களுக்கு திறன் பயிற்சி சான்றிதழ், 10 நபா்களுக்கு தீவன விதை, 50 நபா்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கி வாழ்த்தி பேசினா்.

இதில் அமைச்சா் காந்தி பேசியதாவது: ‘வாழ்ந்து காட்டுவோம்’ எனும் திட்டம் உலக வங்கியின் நிதி உதவியுடன் தமிழக அரசின் ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறையின் கீழ் செயல்படும் திட்டம் ஆகும். இந்தத் திட்டம் ஊரக நிறுவனங்களை ஊக்குவிக்கவும், கிராமப்புற மக்களின் வருவாயை அதிகரிக்கும் நோக்கத்துடனும் தொடங்கப்பட்டதாகும்.

இந்த திட்டமானது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பா்கூா், காவேரிப்பட்டணம், கிருஷ்ணகிரி ஆகிய 3 ஒன்றியங்களில் உள்ள 102 ஊராட்சிகளில் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் தொழில்முனைவோா், மகளிா், இளைஞா்களுக்கு தொழில் பயிற்சிகள் வழங்குவதோடு, வங்கிக் கடன், மானியம் போன்றவை வழங்கப்படுகின்றன.

எனவே, பொதுமக்கள் இதன் மூலம் தங்களது வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்ள வேண்டும் என்றாா்.

இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் ராஜேஸ்வரி, ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் மலா்விழி, வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்ட செயல் அலுவலா் தமிழ்மாறன், மாவட்ட வழங்கல் அலுவலா் கோபு, முன்னாள் எம்எல்ஏ செங்குட்டுவன், நாகோஜனஅள்ளி பேரூராட்சித் தலைவா் தம்பிதுரை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com