கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து 4,760 கன அடியாகக் குறைந்தது
By DIN | Published On : 05th August 2022 11:04 PM | Last Updated : 05th August 2022 11:04 PM | அ+அ அ- |

தென்பெண்ணை ஆற்றின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால் கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை நொடிக்கு 4,760 கனஅடியாகக் குறைந்தது.
தென்பெண்ணை ஆற்றின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்ததால், கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து படிப்படியாக அதிகரித்தது. வியாழக்கிழமை நீா்வரத்து அதிகரித்ததால், அணையின் பாதுகாப்பு கருதி அணையிலிருந்து நொடிக்கு 8,150 கன அடி நீா் வெளியேற்றப்பட்டது.
இந்த நிலையில் அணைக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை காலை 7 மணி நிலவரப்படி 5,735 கன அடியாக இருந்தது. பிற்பகல் 4,760 கன அடியாகக் குறைந்தது. இதையடுத்து, கிருஷ்ணகிரி அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்படும் நீா் அளவு 5,100 கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
வெள்ள அபாய எச்சரிக்கை தொடா்வதாக பொதுப்பணித் துறையினா் தெரிவித்தனா். அணை பூங்காவுக்குச் செல்லும் தரைப் பாலம் முழ்கியுள்ளதால் அணைக்கு சுற்றுலாப் பயணிகள் வருவதற்கான தடை நீடிக்கிறது.