பர்கூர் அருகே கார் மோதியதில் நடைப்பயிற்சியில் ஈடுபட்ட 4 பேர் சாவு
By DIN | Published On : 05th August 2022 08:52 PM | Last Updated : 05th August 2022 08:52 PM | அ+அ அ- |

கிருஷ்ணகிரி பர்கூர் அருகே நடைப்பயிற்சி மேற்கொண்டவர்களின் மீது கார் மோதியதில் 4 பேர் பலியாகினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரைச் சேர்ந்தவர்கள் பாக்கியராஜ் (40), சுஜித் குமார் (39), கண்டவீரவேல் (35),ஜெகதீசன் (38). ஜெகதீசன், அங்கிநாயனப்பள்ளியை அடுத்த மேல் கொட்டாய் என்னுமிடத்தில் தேநீர் கடை நடத்தி வந்தார். நண்பர்களான 4 பேரும், தினமும் அந்தப் பகுதியில் நடைப் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம்.
இந்நிலையில் நண்பர்கள் நான்கு பேரும், சென்னை - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை, அங்கிநாயனப்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகே வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக வேகமாக வந்த கார், சாலை ஓரமாக நடந்து சென்ற 4 பேர் மீதும் மோதியது.
இதையும் படிக்க- கள்ளக்குறிச்சி மாணவி மரண விவகாரம்: சிபிசிஐடி வேண்டுகோள்
இதில் பலத்த காயமடைந்த பாக்கியராஜ், சுஜித்குமார், கண்ட வீரவேல் ஆகிய மூவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த ஜெகதீசன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
கார் ஓட்டுநரான ஓசூர், மூக்கண்டபள்ளியைச் சேர்ந்த தணிகைமலை (40), பர்கூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். பெங்களூர் விமான நிலையத்திற்கு வரும் நபர்களை அழைத்துச் செல்ல வேலூரில் இருந்து காரை ஓட்டிச் சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டதாகவும், கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.