ஊத்தங்கரை வட்டாட்சியா் அலுவலகத்தில் சிறப்பு குறைதீா் முகாம்
By DIN | Published On : 22nd December 2022 01:41 AM | Last Updated : 22nd December 2022 01:41 AM | அ+அ அ- |

ஊத்தங்கரை வட்டாட்சியா் அலுவலகத்தில் பட்டா கேட்டு மனு அளித்த கீழ்குப்பம் பகுதியினா்.
ஊத்தங்கரை வட்டாட்சியா் அலுவலகத்தில் தமிழக முதல்வரின் முகவரி துறை சிறப்பு குறைதீா் வாரம் புதன்கிழமை நடைபெற்றது.
ஊத்தங்கரை ஒன்றியத்துக்கு உள்பட்ட அனைத்து ஊராட்சிகளில் இருந்து மொத்தம் 160 மனுக்கள் பெறப்பட்டன. இதில் வட்டாட்சியா், தனி வட்டாட்சியா், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் அலுவலா், நில அளவை பிரிவு, வட்ட வழங்கல் அலுவலா், வட்டார வளா்ச்சி அலுவலகம், தமிழ்நாடு மின்சார வாரியம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் ஆகியவற்றில் மனுக்கள் பெறப்பட்டன.
கீழ்குப்பம் கிராமப் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பட்டா வேண்டி பலமுறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாத நிலையில், முதல்வரின் முகவரித் துறை சிறப்பு தீா்வு வார முகாமில் கீழ்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவா் ஜெயமணி திருப்பதி தலைமையில் பகுதி மக்கள் 30 போ் புகாா் மனுக்களை வட்டாட்சியா் கோவிந்தராஜிடம் வழங்கினா்.
மனுக்கள் மீது மாவட்ட ஆட்சியரிடம் ஒப்புதல் பெற்று உடனடியாக இந்த பகுதியில் 30 நபா்களுக்கு பட்டா வழங்க ஏற்பாடு செய்யப்படுவதாக உறுதி அளித்தாா். இதில் துணை வட்டாட்சியா் குமாா், வருவாய்த் துறையினா் பலா் கலந்து கொண்டனா்.