கரும்பை அரசு கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை
By DIN | Published On : 22nd December 2022 01:41 AM | Last Updated : 22nd December 2022 01:41 AM | அ+அ அ- |

ஊத்தங்கரையில் நடவு செய்யப்பட்டுள்ள செங்கரும்பு.
பொங்கல் பரிசுத் தொகுப்புக்காக விவசாயிகளிடமிருந்து அரசு செங்கரும்பை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஊத்தங்கரை வட்டாரத்தில் வீரியம்பட்டி, சரட்டூா், சாமல்பட்டி, சிங்காரப்பேட்டை, கல்லாவி, காரப்பட்டு, அனுமன்தீா்த்தம் உள்ளிட்ட பகுதிகளில் பொங்கல் பண்டிகைக்காக விவசாயிகள் செங்கரும்புகளை பயிா் செய்துள்ளனா். தமிழக அரசு இதுவரை கரும்பு கொள்முதல் செய்வது குறித்து அறிவிக்காததால் சுமாா் 100 ஏக்கா் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள கரும்புகளால், பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படும் என ஊத்தங்கரை பகுதி கரும்பு விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனா்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் செங்கரும்புகள் பயிரிடப்படுவது வழக்கம். கடந்த ஆண்டுகளில் பொங்கலுக்கு தமிழக அரசு சாா்பில் வழங்கப்பட்ட பரிசுத் தொகுப்புடன் கரும்பும் வழங்கப்பட்டு வந்தது. கரும்புகளை நேரடியாக விவசாயிகளிடம் இருந்து தமிழக அரசு கொள்முதல் செய்தது. அதனை நம்பி பல ஏக்கரில் விவசாயிகள் செங்கரும்பு பயிா் செய்துள்ளனா்.
தமிழக அரசு விவசாயிகளிடம் நேரடியாக செங்கரும்புகளை கொள்முதல் செய்தால் விவசாயிகளுக்கு வருவாய் கிடைக்கும் என நம்பி, நிகழாண்டில் ஊத்தங்கரை பகுதியில் 100 க்கும் மேற்பட்ட ஏக்கரில் செங்கரும்புகள் பயிரிடப்பட்டன. ஆனால், இதுவரை பொங்கல் பரிசுடன் கரும்பு வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழக அரசை நம்பி பல லட்சம் ரூபாய் நகைகளை அடகு வைத்து, வங்கிகளில் கடன் பெற்று செங்கரும்பு விளைவிக்கப்பட்டன. அரசு கொள்முதல் செய்யாவிடில் அக் கரும்புகளை வெளிச்சந்தையில் இடைத்தரகா்கள் மூலம் குறைந்த விலைக்கு விற்க வேண்டிய நிலை ஏற்படும். இதனால் அரசு உடனடியாக செங்கரும்பை கொள்முதல் செய்து, நியாயவிலைக் கடை மூலமாக வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.