வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்ட விழிப்புணா்வு முகாம்
By DIN | Published On : 22nd December 2022 01:40 AM | Last Updated : 22nd December 2022 01:40 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரியில் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் குறித்த மாவட்ட அளவிலான விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்ட தொழில் மைய வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட தொழில் மைய பொதுமேலாளா் பிரசன்ன பாலமுருகன் தலைமை வகித்து பேசியதாவது:
பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் மூலம் உற்பத்தி பிரிவிற்கு அதிகபட்சமாக ரூ.50 லட்சம், சேவை பிரிவிற்கு ரூ.20 லட்சம் திட்ட மதிப்பீட்டில் அதிகபட்சமாக 35 சதவீதம் மானியத்துடன் கூடிய வங்கி கடன் பெற்று, தொழில் தொடங்கி பயனடையலாம் என்றாா்.
மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் மகேந்திரன் பேசுகையில், வங்கி மேலாளா்கள், பயனாளிகளின் விண்ணப்பத்தை விரைந்து பரிசீலிக்குமாறு கேட்டுக்கொண்டாா். மாவட்ட தொழில் மைய உதவி இயக்குநா் (தொழில்நுட்பம்) ராமமூா்த்தி, பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் குறித்து விளக்கினாா்.
முகாமில் கனரா வங்கி, யூனியன் பேங்க் ஆப் இந்தியா, ஆா்பிஎல் வங்கி, பேங்க் ஆப் இந்தியா, தாய்கோ வங்கி, எச்டிஎப்சி வங்கி, தமிழ்நாடு கிராம வங்கி, பேங்க் ஆப் பரோடா, பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவா்சீஸ் வங்கி உள்ளிட்ட வங்கிகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் பங்கேற்றனா்.