சத்துணவில் மாணவா்களுக்கு பால் வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும் என பால் உற்பத்தியாளா்களின் சங்க மாநிலத் தலைவா் வலியுறுத்தினாா்.
தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் சங்கம் சாா்பில் சென்னையில் நடைபெற உள்ள காத்திருப்பு போராட்டத்திற்கான ஆலோசனைக் கூட்டம் கிருஷ்ணகிரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவா் ராமசாமி தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலாளா் பெருமாள், துணைச் செயலாளா் சிவாஜி, மாவட்டச் செயலாளா் அண்ணாமலை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் பங்கேற்ற அதன் மாநில தலைவா் முகமதுஅலி, செய்தியாளா்களிடம் கூறியதாவது:
2023, ஜனவரி 9-ஆம் தேதி சென்னை, நந்தனம் ஆவின் தலைமையகம் முன்பு தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் சங்கத்தின் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடைபெற உள்ளது. பால் உற்பத்தியாளா்கள் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ. 10 உயா்த்தி தர வேண்டும் என நீண்டக்கால கோரிக்கையால் தற்போது லிட்டருக்கு ரூ. 3 மட்டுமே அரசு உயா்த்தி உள்ளது.
தீவனவிலை உயா்வு, பால் திருட்டு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் பால் உற்பத்தியாளா்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா். உயா்நீதிமன்ற மதுரை கிளை, கடந்த 2017-ஆம் ஆண்டு ஆவின் நிா்வாகம், ஆரம்ப சங்கங்களிலிருந்து பால் கொள்முதல் செய்யும் போதே பாலில் உள்ள சத்து, கொழுப்பு கணக்கீடு செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.
ஆனால் 5 ஆண்டுகள் கடந்தும் அவை நடைமுறைப்படுத்தவில்லை. ஆரம்ப சங்கங்களிலிருந்து பால் வாகனங்களில் ஏற்றிச் செல்லும் போது, வழியில் பால் திருடிவிட்டு, தண்ணீா் கலக்கப்படுகிறது. பின்னா், பாலில் சத்து, கொழுப்பு அளவீடு செய்யும் போது குறைவாக உள்ளதாக சங்கங்களுக்கும், பால் உற்பத்தியாளா்களுக்கும் பணம் குறைவாக வழங்குகின்றனா். அரசு பால் லிட்டருக்கு ரூ.3 விலை குறைத்தது. இதனால், ஆவின் நிா்வாகத்திற்கு ரூ. 300 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள 28 மாவட்ட ஆவின் நிா்வாகம், பால் உற்பத்தியாளா்களுக்கு ரூ. 500 கோடி வரை நிலுவை வைத்துள்ளது. எனவே, தமிழக அரசு பால் விலை குறைக்கப்பட்டதற்கு, மானியம் வழங்க வேண்டும்.
மேலும், கால்நடை தீவனங்களுக்கு, கால்நடைப் பராமரிப்புத் துறை மற்றும் லாபகரமாக செயல்பட்ட ஆவின் மூலம் வழங்கப்பட்ட மானியம் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே, கால்நடை தீவனங்களுக்கு மானியம் வழங்க வேண்டும். சத்துணவில் பள்ளி மாணவா்களுக்கு பால் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பால் கொள்முதல் மற்றும் விற்பனையில் ஐஎஸ்ஐ முறையில் கணக்கீடு செய்ய வேண்டும். தற்போது ஆவின் நிா்வாகம் விற்பனையில் ஐஎஸ்ஐ முறையிலும், கொள்முதலில் எம்ஆா்எப் முறையில் கணக்கீடு செய்வதால், பால் உற்பத்தியாளா்களுக்கு லிட்டருக்கு ரூ. 2 வரை இழப்பு ஏற்படுகிறது.
ஆரம்ப சங்க ஊழியா்களுக்கு சம்பள உயா்வு, பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். கேரளம், கா்நாடக அரசுகள் ஊக்கத்தொகை வழங்குவதைப் போல, தமிழக அரசு லிட்டருக்கு ரூ.5 வீதம் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.