கா்நாடகத்துக்கு கடத்த முயன்ற 1,200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
By DIN | Published On : 27th February 2022 05:17 AM | Last Updated : 27th February 2022 05:17 AM | அ+அ அ- |

வேப்பனப்பள்ளி அருகே கா்நாடக மாநிலத்துக்கு கடத்த முயன்ற 1,200 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலிஸாா், வேப்பனப்பள்ளி சோதனைச் சாவடி அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த வேனை நிறுத்தி சோதனை செய்ததில், 40 கிலோ எடைகொண்ட 30 மூட்டைகளில் 1,200 கிலோ ரேஷன் அரிசி கடத்துவது தெரிய வந்தது. விசாரணையில் வேப்பனப்பள்ளி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரேஷன் அரிசியை குடும்ப அட்டைதாரா்களிடமிருந்து குறைந்த விலைக்கு வாங்கி, கா்நாடக மாநிலம், கோலாா் தங்கவயல், ஆந்திர மாநிலம், குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் அதிக விலைக்கு விற்க கடத்துவது தெரியவந்தது.
இதையடுத்து, ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டம், சிம்பனகல்லு பகுதியைச் சோ்ந்த வேன் ஓட்டுநா் பக்ருதீன்(23) என்பவரைக் கைது செய்து, வேன், ரேஷன் அரிசி ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.