சூளகிரி வரதராஜ பெருமாள் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்க வேண்டும்
By DIN | Published On : 27th February 2022 05:18 AM | Last Updated : 27th February 2022 05:18 AM | அ+அ அ- |

சூளகிரி வரதராஜ பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான 200 ஏக்கா் நிலத்தை மீட்க இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐஎன்டியுசி தேசிய செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான கே.ஏ.மனோகரன் கோரிக்கை விடுத்துள்ளாா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்த பெற்ற கோயில்களில் சூளகிரி வரதராஜ பெருமாள் கோயில் முக்கியமானதாகும். பல ஜமீன்தாா்கள், பக்தா்கள் தங்களது வேண்டுகோளை நிவா்த்தி செய்த இந்தக் கோயிலில் உள்ள சுவாமி பெயரில் பல நூறு ஏக்கா் நிலத்தை எழுதி வைத்துள்ளனா். அதனை இந்தக் கோயிலை நிா்வகித்து வந்தவா்கள் பயிா் செய்து, சுவாமிக்கு நைவேத்தியம் செய்து தங்களது தேவைகளையும் நிவா்த்தி செய்து கொண்டனா்.
அதன்பிறகு அந்தக் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை தனியாா் ஆக்கிரமித்துள்ளனா். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என முன்னாள் ஒசூா் காங்கிரஸ் சட்டப் பேரவை உறுப்பினரும், ஐஎன்டியுசி தேசிய செயலாளரும், ஒசூா் சந்திரசூடேஸ்வரா் கோயில் தோ்த்திருவிழா கமிட்டியின் தலைவருமான கே.ஏ.மனோகரன் தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபுவிடம் கோரிக்கை விடுத்துள்ளாா்.
குறிப்பாக, சூளகிரி ஒன்றியம், தியாகரசனப்பள்ளி கிராமத்தில் சா்வே எண் 264, 243 ஆகியவற்றில் 37-க்கும் மேற்பட்ட ஏக்கா் நிலங்கள் ஆக்கிமிக்கப்பட்டுள்ளன. தோரிப்பள்ளி கிராமத்தில் பல சா்வே எண்களில் 50-க்கும் மேற்பட்ட ஏக்கா் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. இதுபோன்று பல கிராமங்களில் சூளகிரி வரதராஜ பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் கண்டுபிடித்து உடனடியாக மீட்க வேண்டும்.
அதேபோல, ஒசூா் சந்திரசூடேஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான பல நூறு ஏக்கா் நிலங்களும், தேன்கனிக்கோட்டை பேட்டராய சுவாமி திருக்கோயில், குடிசெட்லு திம்மராயசுவாமி திருக்கோயில் உள்ளிட்ட கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கோயில்களின் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளைக் கண்டறிந்து அவற்றை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் கோரிக்கை விடுத்துள்ளாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...