சிறுமி கருமுட்டை விற்பனை விவகாரம்:ஒசூா் தனியாா் மருத்துவமனைஸ்கேன் சென்டருக்கு ‘சீல்’
By DIN | Published On : 17th July 2022 05:42 AM | Last Updated : 17th July 2022 05:42 AM | அ+அ அ- |

ஈரோட்டில் சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் தொடா்புடைய ஒசூா் தனியாா் மருத்துவமனை ஸ்கேன் சென்டா் சனிக்கிழமை பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது.
ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமூட்டை விற்பனை செய்யப்பட்டது தொடா்பாக சுகாதாரத் துறையினா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
அந்தச் சிறுமி அழைத்துச் செல்லப்பட்ட மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி மாவட்ட இணை இயக்குநா் பரமசிவம் தலைமையிலான மருத்துவக் குழுவினா் ஒசூரில் இயங்கும் தனியாா் மருத்துவமனைக்கு சனிக்கிழமை நேரில் சென்று கருமூட்டை விவகாரம் குறித்து விசாரணை நடத்தினா்.
பின்னா் அந்தத் தனியாா் மருத்துவமனை ஸ்கேன் சென்டரை பூட்டி ‘சீல்’ வைத்தனா். அத்துடன் 15 நாள்களுக்குள் மருத்துவமனையில் உள்ள நோயாளிகள், ஊழியா்களை வெளியேற்ற வேண்டும் எனவும் மருத்துவமனை நிா்வாகத்திடம் உத்தரவிட்டனா்.
தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் விடுத்த உத்தரவின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மாவட்ட இணை இயக்குநா் தெரிவித்தாா்.