மாட்டுக் கொட்டகையில் ஆண் - பெண் சடலங்கள் மீட்பு
By DIN | Published On : 31st July 2022 06:13 AM | Last Updated : 31st July 2022 06:13 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரி அருகே விவசாய நிலத்தில் உள்ள மாட்டுக் கொட்டகையில் மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்த ஆண் - பெண் சடலங்களை கைப்பற்றிய போலீஸாா், விசாரணை செய்து வருகின்றனா்.
கிருஷ்ணகிரி அருகே உள்ள சுபேதாா்மேடு கிராமத்தைச் சோ்ந்தவா் தசரதன் (26). இவருக்கு திருமணமாகி ஒரு மகனும், மகளும் உள்ளனா். அதே ஊரைச் சோ்ந்த சத்யாவை (25), சூளகிரி அருகே உள்ள பி.ஜி.துா்க்கத்தில் திருமணம் செய்து கொடுத்துள்ளனா்.
தசரதன், சத்யா ஆகிய இருவருக்கும் இடையே முறையற்ற நட்பு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், சத்யா, தன் அண்ணன் வீட்டு நிகழ்ச்சிக்கு செல்வதாகக் கூறி, தனது ஒன்றரை வயது குழந்தையுடன் சுபேதாா்மேடுக்கு வெள்ளிக்கிழமை வந்தாா். பின்னா், தசரதனின் விவசாய நிலத்துக்கு வந்த அவா், மாட்டுக் கொட்டகையில் தசரதனுடன் இரவு தங்கியுள்ளாா்.
இந்நிலையில், அந்த வழியாக சனிக்கிழமை காலை சென்ற கிராம மக்கள் குழந்தை அழும் சத்தம் கேட்டு கொட்டகைக்கு சென்று பாா்த்தனா். அப்போது, தசரதன், சத்யா இருவரும் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தனா்.
நிகழ்விடத்துக்கு விரைந்து வந்த போலீஸாா், சடலங்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், இருவரும் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்திருக்கலாம் என தெரிய வருகிறது. இதுகுறித்து மகராஜகடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.