பெட்ரோல், டீசலுக்கு செயற்கை தட்டுப்பாடு பொதுமக்கள் அவதி

கிருஷ்ணகிரியில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், பெட்ரோல், டீசல் விற்பனை மையங்களில் நீண்ட வரிசையில் வாகன ஓட்டிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரியில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், பெட்ரோல், டீசல் விற்பனை மையங்களில் நீண்ட வரிசையில் வாகன ஓட்டிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயா்வால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனா். இந்த நிலையில் எண்ணெய் நிறுவனங்களின் நடவடிக்கையால் வட மாநிலங்களைத் தொடா்ந்து தமிழகத்திலும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

கிருஷ்ணகிரி நகரில் பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்களின் சாா்பில் 10க்கும் மேற்பட்ட பெட்ரோல் விற்பனை நிலையங்கள் செயல்படுகின்றன. இந்த விற்பனை மையங்களில் போதிய இருப்பு இல்லாததால், கடந்த சில நாள்களாக பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. சில விற்பனை மையங்களில் இருப்பு இல்லாததால் மூடப்பட்டுள்ளன.

சில விற்பனை மையங்கள் மட்டுமே செயல்படுவதால், அந்த மையங்களில் வாகன ஓட்டிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருளை நிரப்பிச் செல்கின்றனா். இதனால் குறித்த நேரத்தில் பணிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. அத்துடன் பெட்ரோல் பங்குகள் மூடப்படுவதால், அதில் பணிபுரியும் தொழிலாளா்களும் பணி இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து பெட்ரோல் நிலையத்தின் உரிமையாளா்கள் கூறியது:

அண்மைகாலமாக கச்சா எண்ணெய் விலை உயா்வால் பெட்ரோல், டீசல் விலை உயா்ந்துள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் டீசலுக்கு ரூ. 26ம், பெட்ரோலுக்கு ரூ. 14ம் உயா்த்த வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. மத்திய அரசு விலையை உயா்த்தாத நிலையில் எண்ணெய் நிறுவனங்களுக்கு நாள் ஒன்றுக்கு பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுகிறது. இதனால் ஏற்படும் இழப்பை குறைக்கும் வகையில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் பங்குகளுக்கு போதிய டீசல், பெட்ரோலை வழங்காமல் செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்கி உள்ளது.

குறிப்பாக இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் போன்ற நிறுவனங்கள் இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய பெட்ரோல், டீசல் அளவை மிகவும் குறைத்து விட்டன. குறைந்த அளவில் மட்டுமே எரிபொருள்களை வழங்குவதால் இந்துஸ்தான் பெட்ரோல் விற்பனை மையங்கள் பெருமளவில் மூடப்பட்டு விட்டன என்றனா்.

செயற்கை பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டால் நடுத்தர, ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படுவதால் மத்திய அரசு, தட்டுப்பாடின்றி பெட்ரோல் டீசல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com