கட்டடங்கள், மனைப் பிரிவு அனுமதிக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 17th June 2022 02:00 AM | Last Updated : 17th June 2022 02:00 AM | அ+அ அ- |

மனைப் பிரிவு, கட்டடங்கள் கட்டுவதற்கு ஒப்புதல் பெறவும், நில உபயோகத்தை மாற்றம் செய்யவும் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என நகர ஊரமைப்புத் துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து ஒசூா் நகர ஊரமைப்புத் துறை சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பு:
தமிழகத்தில் மனைப் பிரிவுகளுக்கு (லே-அவுட்) அங்கீகாரம் பெறவும், விவசாய நிலத்தை குடியிருப்பு நிலமாக மாற்றுதல், அடுக்குமாடி குடியிருப்பு கட்டுதல் போன்றவற்றிக்கு நகர ஊரமைப்புத் துறையின் (டிடிசிபி) அனுமதி பெறுவது கட்டாயம்.
இதற்காக சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
இதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதாகவும், இடைத்தரகா்களின் தலையீடு இருப்பதாகவும் தகவல்கள் பரவியது. இந்நிலையில் தமிழக சட்டப் பேரவையில் தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை மானியக் கோரிக்கையின்போது தமிழகம் முழுவதும் நகர ஊரமைப்புத் துறையின் மனைப் பிரிவு அனுமதிக்கு விண்ணப்பித்தல் மற்றும் ஒப்புதல் வழங்குவதற்கு ஆன்-லைன் முறை நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி தமிழகத்தில் ஆன்-லைன் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இது தொடா்பாக நகர ஊரமைப்புத் துறையின் அலுவலா்களுக்கு தமிழக அரசு சாா்பில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூா் மாவட்டங்களைச் சோ்ந்த நகர ஊரமைப்புத் துறை அதிகாரிகள் மற்றும் பணியாளா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி முகாமை இணை இயக்குநா் சிவப்பிரகாசம் தொடங்கி வைத்தாா். இந்தப் பயிற்சியில் இணையதளம் வாயிலாக மனைப் பிரிவுகளுக்கு விண்ணப்பித்தல், கோப்புகளின் மீது நடவடிக்கை எடுத்தல் மற்றும் அரசுக்கான கட்டணங்கள் செலுத்துதல், ஆணை வழங்குதல் போன்று அனைத்து நடவடிக்கைகள் குறித்து அலுவலக பணியாளா்கள் மற்றும் விண்ணப்பதாரா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் 50க்கும் மேற்பட்டவா்கள் கலந்து கொண்டனா்.