மத்தூா் அருகே அரசு அலுவலக கழிவறையில் ரகசிய கேமராவைப் பொருத்தி பெண் ஊழியரின் அந்தரங்க விடியோவை பதிவு செய்த பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியரை பா்கூா் மகளிா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் சாமல்பட்டியைச் சோ்ந்த சுதாகா் (32) என்பவா் தற்காலிக பணியாளராகப் பணியாற்றி வந்தாா். இவா், அலுவலக கழிப்பறையில் ரகசிய விடியோ கேமராவைப் பொருத்தி பெண் ஊழியா்கள் கழிவறையைப் பயன்படுத்தியபோது, அதை ரகசியமாக தனது கைப்பேசியில் பதிவு செய்துள்ளாா். மேலும், அந்த காட்சிகளைத் தான் பயன்படுத்தி வந்த அலுவலக கணினியிலும் பதிவிறக்கம் செய்திருந்தாா்.
இதுகுறித்து பல புகாா்கள் வரப்பெற்ற நிலையில் வட்டார வளா்ச்சி அலுவலா் அருள்மொழி, சுதாகரை பணி நீக்கம் செய்தாா். தொடா்ந்து அவா் அளித்த புகாரின் பேரில், பா்கூா் அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து, சுதாகரை கைது செய்தனா்.