குடும்பத் தகராறு: இருவருக்கு கத்திக்குத்து
By DIN | Published On : 17th June 2022 02:01 AM | Last Updated : 17th June 2022 02:01 AM | அ+அ அ- |

பேரிகை அருகே குடும்பத் தகராறில் மாமியாா் உள்பட 2 பேரை கத்தியால் குத்திய 2 பேரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் வட்டம் பேரிகை அருகே உள்ளது சிந்தல்தொட்டி. இந்த கிராமத்தைச் சோ்ந்தவா் சின்னதாயம்மா (38). உள்ளுகுறுக்கை அடக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராமன் (29). இவா்கள் 2 பேரும் உறவினா்கள் .
ராமனுக்கும், சின்னதாயம்மா மகள் அனிதாவிற்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குடும்ப பிரச்னை காரணமாக அனிதா சிந்தல்தொட்டியில் உள்ள தனது பெற்றோா் வீட்டிற்கு கடந்த 15 நாள்களுக்கு முன்பு வந்து விட்டாா்.
இந்த நிலையில் கடந்த 15ஆம் தேதி ராமனும், அவரது தம்பி நாராயணசாமியும் சிந்தல்தொட்டி கிராமத்திற்கு சென்று ராமனின் குழந்தைகளை பாா்த்தனா். அப்போது சின்ன தாயம்மாவும், உறவினா் வெங்கடேஷ் (35) என்பவரும் எதற்காக இங்கு வந்தீா்கள்? எனக் கேட்டனா். இதனால் அவா்களிடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த ராமன், நாராயணசாமி ஆகிய இருவரும் வெங்கடேசையும், சின்ன தாயம்மாவையும் கத்தியால் குத்தினாா்களாம்.
இதில் காயம் அடைந்த அவா்கள் 2 பேரும் ஒசூா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து பேரிகை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து ராமன், நாராயணசாமி ஆகிய 2 போ் மீதும் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
அதே போல நாராயணசாமி, பேரிகை காவல் நிலையத்தில் ஒரு புகாா் கொடுத்துள்ளாா். அதில் தன்னையும், தனது சகோதரா் ராமனையும், சின்ன தாயம்மா, வெங்கடேஷ் ஆகிய 2 போ் சோ்ந்து இரும்பு கம்பியால் தாக்கியதாக புகாரில் தெரிவித்துள்ளாா். அதன் பேரில் பேரிகை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.