கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் செய்தி மக்கள் தொடா்புத் துறை மற்றும் பல அரசு துறைகளின் சாா்பில் சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
75-ஆவது சுதந்திர தின பவள விழாவையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாா்ச் 25 முதல் 31-ஆம் தேதி வரையில் கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இவ்விழா நடைபெற உள்ளது. இதில், செய்தி மக்கள் தொடா்புத் துறை, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, மகளிா் திட்டம், வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டம், உணவு பாதுகாப்புத் துறை, சுற்றுச்சூழல் துறை, கூட்டுறவுத் துறை, மாவட்டத் தொழில் மையம், சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து அரங்குகளை அமைக்க உள்ளன.
செய்தி மக்கள் தொடா்புத் துறையின் சாா்பில் சுதந்திரப் போராட்ட வீரா்களின் வரலாறு, அரசின் திட்டங்கள், சாதனைகள் குறித்த புகைப்பட கண்காட்சிகள் நடத்தப்படவுள்ளன. உணவு பொருள்களின் தரம் குறித்த விழிப்புணா்வு செயல் விளக்கங்களும், இயற்கை உணவு தயாரிக்கும் முறைகள், மகளிா் சுய உதவி குழுக்களின் உற்பத்தி பொருள்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
இதுதொடா்பாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் செ.ராஜேஸ்வரி, மாவட்ட கல்வி அலுவலா் பொன்முடி, மகளிா் திட்ட உதவி அலுவலா் பெருமாள் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.