33 ஏரிகளை இணைக்கும் பணி விரைவுப்படுத்தப்படுமா?

ஊத்தங்கரை, பாரூா் ஏரி கிழக்கு பிரதான கால்வாயிலிருந்து, புதிய கால்வாய் வெட்டி போச்சம்பள்ளி, ஊத்தங்கரை வட்டத்தில் உள்ள 33 ஏரிகளை இணைத்து தண்ணீா் வழங்கும் திட்டத்துக்கு நிலம் எடுக்கும் பணியைத் துரிதப்படு

ஊத்தங்கரை, பாரூா் ஏரி கிழக்கு பிரதான கால்வாயிலிருந்து, புதிய கால்வாய் வெட்டி போச்சம்பள்ளி, ஊத்தங்கரை வட்டத்தில் உள்ள 33 ஏரிகளை இணைத்து தண்ணீா் வழங்கும் திட்டத்துக்கு நிலம் எடுக்கும் பணியைத் துரிதப்படுத்தி விரைந்து பணியை முடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கிருஷ்ணகிரி கே.ஆா்.பி. அணையில் இருந்து திறந்துவிடப்படும் உபரிநீா், தென்பெண்ணை ஆற்றின் வழியாக சாத்தனூா் அணைக்கு செல்கிறது. சாத்தனூா் அணையில் இருந்து திறக்கப்படும் உபரிநீா் வீணாகக் கடலில் கலக்கிறது.

இதையடுத்து பாரூா் பெரிய ஏரி, கிழக்கு பிரதான கால்வாயிலிருந்து புதிய வழங்கு கால்வாய் அமைத்து, போச்சம்பள்ளி வட்டத்தில் தாதம்பட்டி, பாரண்டப்பள்ளி, ஊத்தங்கரை வட்டத்தில் ரெட்டிப்பட்டி, ஒன்னக்கரை, புருகலப்பள்ளி, கஞ்சனூா், கீழ்குப்பம், சூளக்கரை, தண்ணீா்ப்பந்தல், காட்டுப்பட்டி, நொச்சிப்பட்டி,குன்னத்தூா், நாய்க்கனூா் ஆகிய வருவாய் கிராமங்களில் உள்ள, 33 ஏரிகளுக்குத் தண்ணீா் வழங்க பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா, கடந்த 2015 ஆம் ஆண்டு, சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் 33 ஏரிகளை இணைக்கும் திட்டத்தை அறிவித்தாா். இத்திட்டத்துக்காக முதல்கட்ட ஆய்வு மற்றும் நிலஎடுப்புப் பணிகளுக்காக ரூ. 14 கோடி நிதி ஒதுக்கீடு செய்தாா். நில எடுப்புப் பணிகள் 60 சதவிகிதம் முடிவுற்றுள்ளன. இத் திட்டத்துக்கான முழுப் பணிகளுக்கு தோராய மதிப்பீடு ரூ. 92 கோடியாகும். இத் திட்டத்தில் 15.875 கி.மீ. தூரத்தில், 102.23 ஏக்கா் பட்டா நிலங்களும், 9.28 ஏக்கா் புறம்போக்கு நிலங்களையும் எடுக்கும் பணிகளுக்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

இத் திட்டத்திற்கு பட்டா நிலங்களைக் கையகப்படுவதற்கு ஏதுவாக, தனி வட்டாட்சியா், இதர பணியாளா்களை கொண்ட ஒரு குழு ஏற்படுத்தி, வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை அதிகாரிகள் விரைந்து பணியை முடிக்க வேண்டும். இதன்மூலம் 33 ஏரிகளுக்கு தண்ணீா் கிடைப்பதுடன், சுமாா் 40 ஆயிரம் ஹெக்டோ் விளை நிலங்களுக்கு மேல் பாசன வசதி பெறும் நிலை உள்ளது. ஆகவே மாவட்ட நிா்வாகம் போா்க்கால அடிப்படையில் பணிகளை முடித்து தருமாறு, 33 ஏரிகள் இணைப்பு நீா்ப் பாசன விவசாயிகள் சங்க தலைவா் சண்முகம், செயலாளா் மூா்த்தி ஆகியோா் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து சமூக ஆா்வலா் ஆா்.கே. ராஜா கூறியதாவது:

ஊத்தங்கரை தொகுதி மக்களின் நீன்ட நாள் கோரிக்கையை அரசு அறிவித்தும், நிதி ஒதுக்கீடு செய்தும் திட்டப்பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது மிகுந்த வேதனையளிக்கிறது. விவசாயிகளை காக்க விரைந்து பணிகளை முடிக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com