அரசியல் ரீதியாக சசிகலாவுக்கு மரியாதை கிடையாது: கே.பி.முனுசாமி
By DIN | Published On : 30th March 2022 01:49 PM | Last Updated : 30th March 2022 01:49 PM | அ+அ அ- |

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் சசிகலா மீது தனிப்பட்ட மரியாதை இருப்பதாக தெரிவித்தது எந்த தவறும் இல்லை ஏனென்றால் 2001 ஆம் ஆண்டு அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா பன்னீர்செல்வத்தை அமைச்சர் ஆக்கினார்.
அப்போதிருந்து ஜெயலலிதா மறைவு முதல் பல்வேறு பொறுப்புகளில் பன்னீர்செல்வம் இருந்து வந்தார். ஜெயலலிதாவுடன் சசிகலா உடன் இருந்த காரணத்தினால் அவர் மீது மரியாதை வைப்பது எந்த ஒரு தவறும் இல்லை. ஆனால் அரசியல் ரீதியாக சசிகலாவுக்கு மரியாதை கிடையாது. சசிகலாவை சந்தித்த அதிமுகவினர் கட்சியிலிருந்து நீக்கம் செய்வதில் முதல் கையெழுத்துப் போட்டவர் பன்னீர்செல்வம், சசிகலாவை புறம்தள்ளி ஒதுக்கி விட்டோம் என்று தெரிவித்தார். சசிகலா தன்னை பாதுகாத்துக்கொள்ள முன்னிலைப் படுத்திக் கொண்டு சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
முதல்வரின் துபாய் சுற்றுப்பயணம் பல்வேறு விமர்சனங்கள், முறைகேடுகள், குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆதாரங்களுடன் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். அவரது குற்றச்சாட்டுக்கு தமிழக முதல்வர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும். பொது வாழ்வுக்கு வரும் தலைவர்கள், அமைச்சர்களுக்கு நாவடக்கம் மிக முக்கியம். ஒரு சமூகத்தைப் பற்றி விமர்சிக்க அரசியலமைப்பு சட்ட ரீதியாக எவருக்கும் உரிமை கிடையாது இப்படி இருக்கும் போது திமுக அமைச்சர் ராஜகண்ணப்பன் சமூக ரீதியாக அரசு அலுவலர்களை பேசி உள்ளார். அவர் மீது முறைப்படி முதலவர் அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்து வழக்குப் பதிவு செய்திருக்க வேண்டும்.
திமுக அரசு அனைத்து மட்டங்களிலும் தோல்வி அடைந்து விட்டது. இதை மறைப்பதற்காக திராவிடன் மாடல் என்ற முகமூடியை தமிழக முதல்வர் அணிந்திருக்கிறார். முகவரியை கழற்றி வைத்துவிட்டு மக்களுக்கு அவர் சேவையாற்ற வேண்டும் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ கூறினார்.
அப்போது, கிருஷ்ணகிரி எம்எல்ஏ அசோக்குமார் மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.