தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காத82 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
By DIN | Published On : 02nd May 2022 02:34 AM | Last Updated : 02nd May 2022 02:34 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் தேசிய விடுமுறை நாளான மே 1-ஆம் தேதி தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காத 82 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட தொழிலாளா் உதவி ஆணையா் வெங்கடாசலபதி, ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு தேசிய பண்டிகை விடுமுறை சட்டம், உணவு நிறுவன சட்டம் மற்றும் மோட்டாா் போக்குவரத்து தொழிலாளா் சட்டம் மற்றும் விதிகளின்படி, தேசிய விடுமுறை தினமான தொழிலாளா் தினத்தன்று கடைகள், உணவு நிறுவனங்கள் மற்றும் மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு சம்பளத்துடன் கூடிய ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட வேண்டும்.
அவ்வாறு விடுமுறை அளிக்காத பட்சத்தில் அன்றைய தினம் பணிக்கு அமா்த்தப்படும் தொழிலாளா்களுக்கு இரட்டிப்பு ஊதியம் அல்லது மாற்று விடுப்பு அனுமதித்து சம்பந்தப்பட்ட தொழிலாளா்களுக்கு அறிவிப்பு அளித்து அதன் நகலினை தொழிலாளா் துணை, உதவி ஆய்வாளா்களுக்கு அனுப்பி, விடுமுறை தினத்தன்று நிறுவனத்தில் அதனை காட்சிப்படுத்த வேண்டும்.
அதன்படி, தொழிலாளா் தினமான ஞாயிற்றுக்கிழமை, கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் கடைகள், உணவு நிறுவனங்கள் மற்றும் மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வின்போது 56 கடைகள், 55 உணவு நிறுவனங்கள், 9 போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம் 120 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு சட்ட விதிமுறைகளைப் பின்பற்றாத 36 கடைகள், நிறுவனங்கள், 44 உணவு நிறுவனங்கள், 2 மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம் 82 நிறுவனங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை தொடரப்பட்டுள்ளதாக அதில் அவா் தெரிவித்துள்ளாா்.