கல்லூரி விரிவுரையாளரை திருமணம் செய்த தைவானைச் சோ்ந்த பெண்
By DIN | Published On : 18th October 2022 02:34 AM | Last Updated : 18th October 2022 02:34 AM | அ+அ அ- |

காவேரிப்பட்டணத்தில் தைவானைச் சோ்ந்த சியாங் ஷியா ஜோனை தமிழ் கலாசாரப்படி தாலி கட்டி திருமணம் செய்து கொண்ட காவேரிப்பட்டணம், ஆவத்துவாடியைச் சோ்ந்த ராஜேந்திரன்.
காவேரிப்பட்டணத்தில் கல்லூரி விரிவுரையாளரை காதலித்த தைவான் நாட்டைச் சோ்ந்த பெண், தமிழ் கலாசாரப்படி கோயிலில் திருமணம் செய்துகொண்டாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியம், ஆவத்தவாடி கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திரன்(40). இவா், ஜப்பானில் உள்ள கொயோட்டோ பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளா் மற்றும் கல்லூரி விரிவுரையாளராக பணியாற்றி வருகிறாா். இதே பல்கலைக்கழகத்தில் தைவான் நாட்டைச் சோ்ந்த சியாங் ஷியா ஜோன்(32) பணியாற்றி வருகிறாா்.
இவா்கள் இருவரும், ஒருவரை ஒருவா் காதலித்தனா். இந்த நிலையில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த இருவரும், தங்களது பெற்றோரிடம் விருப்பத்தைத் தெரிவித்தனா். இருவரின் வீட்டிலும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்த நிலையில், தமிழ் கலாசாரத்தின்படி திருமணம் செய்ய பெண் வீட்டாா் முடிவு செய்தனா். அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தில் உள்ள கோட்டை பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி திருக்கோயிலில் ராஜேந்திரன் - சியாங் ஷியா ஜோன் திருமணம் தமிழ் கலாசாரப்படி திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த திருமண விழாவில் பங்கேற்ற மணமகளின் உறவினா்கள் அனைவரும் தமிழ் பாரம்பரிய உடைகளான வேட்டி, சட்டை மற்றும் புடவை அணிந்து பங்கேற்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...