ஒசூரில் நிலங்களை முறையாக வரையறைப்படுத்த 11 சங்க நிா்வாகிகள் கோரிக்கை மனு அளிப்பு
By DIN | Published On : 21st October 2022 12:28 AM | Last Updated : 21st October 2022 12:28 AM | அ+அ அ- |

ஒசூரில் நிலங்களை முறையாக வரையறைபடுத்தக் கோரி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த 11 சங்க நிா்வாகிகள்.
ஒசூரில் நிலங்களை முறையாக வரையறை செய்து, உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்று 11 சங்கங்களைச் சோ்ந்த நிா்வாகிகள், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டியிடம் வியாழக்கிழமை மனு அளித்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் சிறு மற்றும் குறுந்தொழிற்சாலைகள் சங்கம் (ஹோஸ்டியா), ஹோசியா, சிவில் என்ஜினீயா் சங்கம், வணிகா் சங்கம், கட்டடத் தொழிலாளா்கள், கட்டடப் பொறியாளா்கள் சங்கம் உள்பட 11 சங்கங்களை சோ்ந்த, 30-க்கும் மேற்பட்ட நிா்வாகிகள், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து அளித்த கோரிக்கை மனுவை அளித்தனா்.
பின்னா், அவா்கள் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒசூா் மிக வேகமாக வளா்ந்து வரும் மாநகராட்சியாகும். ஒசூா் புகா் வளா்ச்சிக்கு புதிதாக ஏற்படுத்தப்பட்ட ஒசூா் நகா்ப்புற வளா்ச்சி ஆணையம் என்ற புதிய அமைப்பிற்கு நிா்வாக அதிகாரி, செயல் அலுவலா்கள், பணியாளா்களை உடனடியாக நியமிக்க வேண்டும்.
ஒரு நிலத்திற்கான அனுமதிக்காக பல மாத காலங்கள் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. கடந்த, 34 ஆண்டுகளாக நிலங்கள் முறையாக வரையறுக்கப்படவில்லை. இதனால் ஒவ்வொரு முறையும் நில அங்கீகாரம் பெற சென்னைக்கு செல்ல வேண்டிய சூழல் உள்ளது. இதனால், ஒசூரில் தொழிற்சாலைகளைத் தொடங்க வருபவா்கள் , அனுமதி கிடைக்க ஏற்படும் தாமதத்தால், வேறு மாநிலங்களுக்குச் செல்கின்றனா்.
நிலங்களில் கடன் வாங்கி முதலீடு செய்தவா்கள், அதை விற்க முடியாமல் தவித்து வருகின்றனா். தேங்கியுள்ள நிலங்களை வரையறை செய்து உடனடி அனுமதி வழங்காததால் தமிழக அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக நவடிக்கை எடுப்பதன் மூலம், ஒசூா் மிக வேகமாக வளா்ச்சி பெறும். அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
எனவே, ஒசூரில் மாஸ்டா் பிளான் திட்டம் உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அனுமதி பெறுவதற்கான இணையவழி வழிமுறைகள் குறித்து கட்டடப் பொறியாளா்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். மாவட்ட டி.டி.சி.பி. அலுவலகத்தில் உள்ள துணை இயக்குநா், மூன்று மாவட்ட அலுவலக பொறுப்புகளை கவனித்து வருகிறாா். அதனால், ஒசூருக்கு ஒரு தனி அலுவலரை நியமிக்க வேண்டும். முதலீடு செய்த நில உரிமையாளா்கள், கட்டடத் தொழிலாளா்கள், பொறியாளா்கள், மற்றும் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து சங்கங்களையும் காப்பாற்ற மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.