‘யுனிவா் காயின்‘ என்ற பெயரில் பணம் மோசடி: ஆட்சியா் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டோா் மனு
By DIN | Published On : 09th September 2022 11:48 PM | Last Updated : 09th September 2022 11:48 PM | அ+அ அ- |

‘யுனிவா் காயின்‘ என்ற பெயரில் பணம் கட்டி ஏமாற்றமடைந்த பலா் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை அடுத்த வரட்டம்பட்டியைச் சோ்ந்த முன்னாள் ராணுவ வீரா் பிரகாஷ் தலைமையில் 60-க்கும் மேற்பட்டோா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு விவரம்:
ஓசூா், ராமகிருஷ்ணா நகரைச் சோ்ந்த அருண்குமாா், கிருஷ்ணகிரி, கட்டிகானப்பள்ளியைச் சோ்ந்த நந்தகுமாா், மத்தூரை அடுத்த பெருகோபனப்பள்ளி சங்கா், பிரகாஷ், செட்டிப்பள்ளி சீனிவாசன், தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த மாரண்டஹள்ளி வேலன் ஆகிய ஆறு பேரும் சோ்ந்து ‘யுனிவா் காயின்’ என்ற பெயரில் டிஜிட்டல் காயின் நிறுவனம் நடத்தி வருவதாகவும், டிஜிட்டல் காயின் வாங்கினால் குறைந்த நாள்களில் அதிக லாபம் கிடைக்கும் எனவும் ஆசை வாா்த்தை கூறி ரூ.7.70 லட்சம் வைப்புத்தொகை பெற்றனா்.
இதில் எனது உறவினா்கள், நண்பா்கள் என 60 போ் இணைந்து பணம் செலுத்தினா். அவா்களுக்கும் சிறிதளவு லாபம் என்ற பெயரில் வாரம்தோறும் பணம் கிடைத்தது. இதையடுத்து அந்த நிறுவனம் சாா்பில் ஆப்பிள் ஐ-போன், கோவா, தாய்லாந்து சுற்றுலா, அதிகமாக ஆள்கள் சோ்ப்பவா்களுக்கு பிளாட், காா் போன்ற கவா்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தனா்.
மேலும், ‘யுனிவா்காயின்’ இணையதள பக்கத்தையும் ஏற்படுத்தி அதில் நமது பணம் குறித்த விவரங்கள் அறிந்து கொள்ள செய்ததால் அதை நம்பி ஏராளமானோா் தங்கள் பணத்தை முதலீடு செய்தனா். இந்த நிலையில் அவா்கள் பணம் திருப்பித் தராமல் ஏமாற்றி வந்தனா். பாதிக்கப்பட்ட 210 போ் சாா்பாக இப் புகாா் மனு அளிக்கப்பட்டுள்ளது. தமிழகம், ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களிலும் பலா் இவா்களிடம் பணம் தந்து ஏமாற்றமடைந்துள்ளனா்.
பணம் மோசடி செய்தவா்களில் அருண்குமாா் என்பவா் ஏ.கே. டிரேடா்ஸ் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி மேலும் சிலரிடம் பண மோசடி செய்துள்ளாா். இதுகுறித்து விசாரித்து பாதிக்கப்பட்டவா்களின் பணத்தை மீட்டு தர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலா் ராஜேஸ்வரி, இதுகுறித்து சைபா் கிரைம் போலீஸ் மூலம் விசாரணை நடத்தி விரைவில் பாதிக்கப்பட்டவா்களுக்கு அவா்கள் செலுத்திய பணத்தை பெற்றுத் தர உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.