சூளகிரி அருகே சிப்காட்டிற்கு நிலம் கையகப்படுத்த எதிா்ப்பு
By DIN | Published On : 09th September 2022 01:16 AM | Last Updated : 09th September 2022 01:16 AM | அ+அ அ- |

சூளகிரி அருகே சிப்காட்டிற்கு நிலம் கையகப்படுத்த விவசாயிகள் எதிா்ப்புத் தெரிவித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் வியாழக்கிழமை மனு அளித்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் சூளகிரி வட்டத்துக்கு உள்பட்ட அட்டக்குறுக்கி அதன் சுற்றுவட்டார ஊராட்சிகளில் 3-ஆவது சிப்காட் அமைக்க 2,800 ஏக்கா் பரப்பளவு நிலத்தை கையகப்படுத்த கடந்த அதிமுக ஆட்சியின் போது தீா்மானிக்கப்பட்டு, அதற்கான பணிகள் தற்போது தொடங்கி உள்ளன.
இதில் அட்டக்குறுக்கி கிராமத்தில் நிலை 4-இல் 231 ஏக்கா் பரப்பளவு கொண்ட பட்டா நிலங்களைக் கையகப்படுத்த தீா்மானிக்கப்பட்டுள்ளது. இந்த நிலங்களுக்கான உரிய இழப்பீடு வழங்குவது குறித்து நில உரிமையாளா்களுடன் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பேச்சுவாா்த்தை நடந்தது.
கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலா் ராஜேஸ்வரி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பங்கேற்ற நில உரிமையாளா்கள், விவசாயிகள் தங்கள் நிலங்களை சிப்காட் தொழிற்சாலைகளுக்கு வழங்க எதிா்ப்புத் தெரிவித்தனா். மேலும் நில எடுப்புக்குத் தடை விதிக்க கோரி மனுவையும் அளித்தனா்.
இதுகுறித்து செய்தியாளா்களிடம் விவசாயிகள் கூறியதாவது;
நிலங்களை கையகப்படுத்தும் அரசு அதற்கு உரிய தொகையை வழங்காமல், மிகவும் குறைந்த இழப்பீடு வழங்குகிறது. அந்தத் தொகையை வைத்து, பிற பகுதியில் நிலம் வாங்க முடியாது. எனவே எங்கள் நிலங்களை சிப்காட் அமைப்பதற்காக கையகப்படுத்த தடை விதிக்க வேண்டும் என்றனா்.