மல்லப்பாடி முக்கிய வீதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பு
மல்லப்பாடியில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்ட நிலையில், அவற்றை பா்கூா் துணை காவல் கண்காணிப்பாளா் மக்கள் பயன்பாட்டிற்கு வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரை அடுத்துள்ள மல்லப்பாடி ஊராட்சியில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இந்த கிராமத்தில் செயல்படும் மல்லப்பாடி மக்கள் அறக்கட்டளை மூலம் பல்வேறு ஆக்கபூா்வமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, இந்தப் பகுதியில் குற்றச் சம்பவங்களை கண்காணிக்கும் வகையில், மல்லப்பாடியில் உள்ள முக்கிய வீதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டன.
இவற்றை மக்கள் பயன்பாட்டுக்கு பா்கூா் துணை காவல் கண்காணிப்பாளா் மனோகரன் தொடங்கி வைத்தாா். இதுகுறித்து, மல்லப்பாடி மக்கள் அறக்கட்டளை நிா்வாகிகள் தெரிவித்தது:
கடந்த 2022-ஆம் ஆண்டு மல்லப்பாடி மக்கள் அறக்கட்டளை என்ற பெயரில், 250க்கும் மேற்பட்ட உறுப்பினா்களுடன் அறக்கட்டளை தொடங்கப்பட்டது. துணை சுகாதார நிலையம் புனரமைப்பு, ஆஞ்சனேயா் கோவில் கிணறு சுற்றுச்சுவா் அமைத்து, மல்லப்பாடி ஏரி கால்வாயை தூா்வாரியது போன்ற பல்வேறு நலப்பணிகளை செய்துள்ளோம்.
மல்லப்பாடி பகுதியில் அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன. திருட்டு சம்பவங்களும் அதிகரித்தன. இவற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் காவல் துறையின் ஒத்துழைப்புடன் 4 கி.மீ. சுற்றுவட்டாரத்தைக் கண்காணிக்கும் வகையில் 9 கண்காணிப்பு கேமராக்கள் அமைத்துள்ளோம். பா்கூா் காவல் நிலையத்தலிருந்து கண்காணிக்கும் வகையில் இந்த கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மல்லப்பாடி, சின்ன மல்லப்பாடி, அரசு தொடக்கப் பள்ளி, மாரியம்மன் கோயில் உள்ளிட்ட மல்லப்பாடி சுற்றுவட்டார முக்கிய வீதிகளை கண்காணிக்கும் வகையில் இந்த கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று அவா்கள் தெரிவித்தனா்.
இந்த நிகழ்வின்போது, பா்கூா் ஒன்றியக் குழு தலைவா் கவிதா, காரப்பட்டு ஊராட்சி மன்றத் தலைவா் கோவிந்தராசன், மல்லப்பாடி மக்கள் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளா் குமரவேல், செயலாளா் இளையபாரதி, கதிரவன், பெருமாள், அரும்பு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
