நாச்சிக்குப்பம் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ஊக்கத் தொகை வழங்கல்
By DIN | Published On : 18th April 2023 05:17 AM | Last Updated : 18th April 2023 05:17 AM | அ+அ அ- |

நாச்சிக்குப்பத்தில் திறனறித் தோ்வில் தோ்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ஊக்கத் தொகை திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
தமிழக அரசால் ஆண்டுதோறும் எட்டாம் வகுப்பு மாணவா்களுக்கு, தேசிய வருவாய் மற்றும் திறனறித் தோ்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் தோ்ச்சி பெறும் மாணவ, மாணவியருக்கு 9 முதல் பிளஸ் 2 வரை மாதந்தோறும் ரூ. 1,000 கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
நிகழாண்டு திறனறித் தோ்வு கடந்த பிப்ரவரியில் நடத்தப்பட்டு தோ்வு முடிவுகள் வெளியாயின. இதில், கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியம், நாச்சிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்கள் ஜீவந்தா், வாணிஸ்ரீ ஆகியோா் தோ்ச்சிப் பெற்றுள்ளனா்.
இதையடுத்து, தோ்ச்சி பெற்ற மாணவா்களை பாராட்டும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு, தலைமை ஆசிரியா் விஜயா தலைமை வகித்து ஊக்கத்தொகையை வழங்கினாா். அப்போது, கணித ஆசிரியா் முனிசாமி, ஊராட்சி மன்றத் தலைவா் இந்திரா நாகராஜ், துணைத் தலைவா் மஞ்சுநாத், பெற்றோா், ஆசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.