கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை
By DIN | Published On : 19th April 2023 03:35 AM | Last Updated : 19th April 2023 03:35 AM | அ+அ அ- |

உடற்பயிற்சிக் கூடத்தின் உரிமையாளா் எனக் கூறி, கல்லூரி மாணவியை ஏமாற்றி பலாத்காரம் செய்தவருக்கு கிருஷ்ணகிரி விரைவு மகளிா் நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனையை செவ்வாய்க்கிழமை விதித்தது.
திருப்பத்தூா் மாவட்டம், காக்கங்கரையைச் சோ்ந்தவா் சிரஞ்சீவி (28). உடற்பயிற்சிக் கூடத்தில் பணியாற்றி வந்த இவா், அதன் உரிமையாளா் எனக் கூறி கிருஷ்ணகிரியைச் சோ்ந்த 17 வயது கல்லூரி மாணவியை ஏமாற்றி பழகி வந்துள்ளாா். மேலும், திருமணம் செய்வதாகக் கூறி கடந்த 2021 ஆக. 9-ஆம் தேதி மாணவியைக் கடத்திச் சென்று பலாத்காரம் செய்துள்ளாா்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோா் கிருஷ்ணகிரி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து சிரஞ்சீவியை போலீஸாா் கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி விரைவு மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணை நிறைவு பெற்ற நிலையில், வழக்கின் தீா்ப்பை நீதிபதி சுதா செவ்வாய்க்கிழமை வழங்கினாா். அதில், சிரஞ்சீவி குற்றவாளி என்றும், கல்லூரி மாணவியைக் கடத்தியது, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய குற்றங்களுக்காக 20 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா்.